புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான நிபுணர்குழு என்பது கண்துடைப்பு நாடகம். எனவே, இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல எம்.பியே அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புதிய அரசியலமைப்பு தொடர்பில் யோசனைகளை முன்வைக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்விவகாரத்தைக் கையாளும் நிபுணர்கள் குழுவில் அரசுக்கு சார்பான சட்டத்தரணிகளே இடம்பெற்றுள்ளனர். இப்படியான குழுவின் முன்னால் யோசனை முன்வைத்து தமது தரப்புக்கு பழக்கமில்லை என்று எமது சட்டத்தரணிகள் தெளிவாக எடுத்துரைத்தனர்.
ஒன்று, நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்பு நிர்ணய சபையாகமாற்றி அதன் ஊடாக புதிய அரசமைப்பை இயற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். பல தரப்பு கலந்துரையாடல்களை நடத்தி, உரிய தீர்வை எட்டுவதற்கு இதுவே பொருத்தமான களமாக அமையும்.
அதேவேளை, 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து அரச தரப்புக்குள் ஒருமித்த நிலைப்பாடு இல்லை என நிபுணர்கள் குழுவினால், எமது சட்டத்தரணிகள் குழாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பமே குழப்பமாகவும், அரசுக்குள் முரண்பாடும் உருவாகியுள்ளது. இந்நிலையில் எப்படி நாம் யோசனைகளை முன்வைப்பது. இது கண்துடைப்பு நாடகமாகும்.
தேர்தலை நடத்தினால் அரசுக்கு தோல்வி உறுதி. எனவே, புதிய அரசியலமைப்பை காரணம்காட்டி தேர்தலை இழுத்தடிப்பதே அரசின் நோக்கம். ” -என்றார்.