ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதி எஞ்சியிருந்தாலும், பிரதான அரசியல் கட்சிகள் அத்தேர்தல் தொடர்பிலும் தமது பார்வையை செலுத்தியுள்ளன. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பரந்தப்பட்ட கூட்டணி அமைத்து களமிறங்கினாலும் வேட்பாளர் ‘சஜித் பிரேமதாசதான்’ என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆளுங்கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பில்தான் பல கோணங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அரசமைப்பின் பிரகாரம் நபரொருவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இரு தடவைகள் வகிக்கலாம். அந்தவகையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு வாய்ப்பு இருந்தாலும், அவர் போட்டியிடமாட்டார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
பங்காளிக்கட்சி தலைவர்கள் சிலருடன் அண்மையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றின்போது, அடுத்த தேர்தலில் தான் போட்டியிடமாட்டார் எனவும், பொருத்தமான வேட்பாளர் ஒருவரை தயார்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார் என கொழும்பு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
இலங்கை அரசியலில் புரட்சியை ஏற்படுத்தி புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலக்காக இருக்கின்றது. எனினும், அதனை நோக்கி பயணிப்பதற்கு பல தடைகள் இருப்பதாலும், மேலும் சில காரணங்களாலுமே ஜனாதிபதி இவ்வாறானதொரு அறிவிப்பை விடுத்திருக்க கூடும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
0ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்காவிட்டால், பஸில் ராஜபக்சவே போட்டியிடுவார் எனவும் கூறப்படுகின்றது. எனினும், புதிய அரசமைப்பின் ஊடாக எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதனை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சியில் இறுதி முடிவு எடுக்கப்படக்கூடும்.