‘பஸ்ஸை தவறவிட்டும் ஆட்டோவில் சென்று பலியான தம்பதி – பசறையில் சோகம்’

பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் பலியான பெருந்துயர் சம்பவமானது ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பசறை பகுதி கண்ணீர் குளமாகியுள்ளதுடன், வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றன. பெருந்திரளான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

15 பேரின் வாழ்வு விழிமூடி விழி திறப்பதற்குள் முடிவுக்கு வந்ததை நினைக்கையில் விழிநீர் பெருக்கெடுக்கின்றது. நெஞ்சம் துடிக்க மறுக்கின்றது என பலரும் வேதனை வெளியிடுகின்றனர்.

குறித்த பேருந்து விபத்தில் லுனுகலை அடாவத்தை பகுதியைச் சேர்ந்த பெனடிக் மெடோனா (31), அந்தோனி நோவா (32) ஆகியோரும் உயிரிழந்தனர். இத்தம்பதி குறித்த பேருந்தை தவறவிட்டுள்ளது.

ஆனால் உரிய நேரத்தில் பதுளை வைத்தியசாலைக்கு செல்லவேண்டும் என்பதற்காக ஆட்டோவில் வந்த, பேருந்தை துரத்திபிடித்து ஏறியுள்ளனர்.

சிலவேளை பேருந்து சென்றுவிட்டது, பிரிதொரு பஸ்ஸில் செல்வோம் என அவர்கள் நினைத்திருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். விதி யாரைதான் விட்டுவைத்தது என்று மட்டுமே தற்போது கவலையடையமுடியும் எனவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டனர்.

அதிலும் குறிப்பாக அந்தோனி நோவா என்பவர் பிறந்த நாளிலேயே உயிரிழந்தும் உள்ளார்.

க.கிசாந்தன், மலர்வேந்தன்

Related Articles

Latest Articles