அமைச்சர் சரத் வீரசேகரவை வறுத்தெடுத்த அநுரகுமார திஸாநாயக்க

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையிலான சொற்போர் உக்கிரமடைந்துள்ளது.

21/4 தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளான மொஹமட் இல்ஹாம், மொஹமட் இன்ஷாப் ஆகிய இளம் வர்த்தகர்களின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் என்ற கோடீஸ்வர வர்த்தகர் ஜே.வி.பியின் தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக பெயர் குறிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்காலத்தில் வாக்குமூலம் பெறப்படும் என சரத் வீரசேகர அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, சரத் வீரசேகரனின் அறிவிப்புளானவை புஷ்வாணமாகும் என சுட்டிக்காட்டி அதற்கான காரணத்தையும் வெளியிட்டார்.

” மாகாணசபை முறைமை நீக்கப்படும் என சரத் வீரசேகர அறிவித்தார். ஆனால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகின்றது. எனவே, சரத் வீரசேகரவின் அறிவிப்பு புஷ்வாணமாகிவிட்டது.

ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையுமாறு பாதாள குழுவினருக்கு சரத் வீரசேகர அழைப்பு விடுத்தார். ஆனால் பாதாளக்குழு அவ்வாறு சரணடையவில்லை. அத்துடன், இளைஞர்களுக்கு 2 வருடங்கள் இராணுவப் பயிற்சி வழங்கப்படும் என கூறினார். இதனை அரசு நிராகரித்தது.  இதனால்தான் புஷ்வாண அறிவிப்புகள் என குறிப்பிட்டேன்.” – என்று அநுர பட்டியலிட்டுக்காட்டி உரையாற்றினார்.

இதனால் சீற்றமடைந்த அமைச்சர் சரத் வீரசேகர, புஷ்வாணமா, தோட்டாக்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என குறிப்பிட்டார்.

இந்நிலையில் நேற்றும் சரத் வீரசேகரவை விளாசும் வகையில் அநுர குமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டார்.

” என்னை விசாரணைக்குழுவுக்கு அழைக்க வேண்டும் என அரசோ அல்லது சரத் வீரசேகரவோ ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கவில்லை. இந்நிலையில் திடீரென சரத் வீரசேகரவுக்கு என்னை ஞாபகம் வருவது ஏன்? நாட்டில் பிரச்சினையொன்று உருவாகும்போது அதனை திசைதிருப்புவதற்காக சரத் வீரசேகர போன்றவர்கள் செய்திகளை உருவாக்குகின்றனர்.

அதுமட்டுமல்ல புஷ்வாணமா, தோட்டாக்களா என என்னை மிரட்டுகின்றார். எங்களின் காதோரம்கூட தோட்டாக்கள் பறந்துள்ளன. எனவே, எம்மை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது.” – என்றார்.

Related Articles

Latest Articles