ஜெனிவா இராஜதந்திரச் சமர் – இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் வெற்றிபெறுமா இலங்கை ?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான புதிய பிரேரணைமீது இன்று 23 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. பிரிட்டன், ஜேர்மன், கனடா, மொண்டிநீக்ரோ, வட மெசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இணைந்தே புதிய பிரேரணையை முன்வைத்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்திலேயே பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும். அந்தவகையில் சீனா வாக்கெடுப்பை கோரும்.

இலங்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரேரணையை எதிர்ப்பதற்கு சீனா, ரஷ்யா, கியூபா, வெனிசூலா, பாகிஸ்தான், கொரியா, நேபாளம்,இந்தோனேசியா, பங்களாதேஷ், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தீர்மானித்துள்ளன.

அதேவேளை, மேற்படி பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு இணை அனுசரணை வழங்கும் ஐந்து நாடுகளுடன் ஆர்ஜென்டினா,ஆஸ்திரியா, பிரேசில், கமரூன், மென்மார்க், மெக்ஸிகோ, செனகல், போலந்து, பிரான்ஸ், காபோன், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் கைகோர்த்து, சார்வாக வாக்களிக்கவுள்ளன.

இந்தியா, ஜப்பான் உட்பட மேலும் சில நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகிக்கக்கூடும்.

அதேவேளை, பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்கான பெரும்பான்மையை இணை அனுசரணை வழங்கும் நாடுகள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன எனவும், இதற்கு பிரிட்டன் தலைமை வகித்துவருகின்றது எனவும் இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இம்முறை அங்கம் வகிக்காதபோதிலும், இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles