‘தை பிறந்துவிட்டது – ஆடியும் முடியப்போகிறது – ஆயிரம் ரூபா மட்டும் வரவே இல்லை’

” சிலர் கூறுவது போல தாத்தாவும், அப்பாவும் மலையகம் தொடர்பில் கனவு காணவில்லை. நாம்தான் கண்டோம். கண்ட கனவுகளை நிறைவேற்றியும் உள்ளோம்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கினிகத்தேனை கெனில்வத்தை தோட்டத்தில் இன்று (24.07.2020) மாலை இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையகம் தொடர்பில் நாமே கனவு கண்டோம். அந்த கனவுகளை நிறைவேற்றியுள்ளோம். எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளோம். ஆனால் தாத்தா கண்ட கனவு, அப்பா கண்ட கனவு என்று சிலர் மக்களை ஏமாற்றிவருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலின்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார். தற்போது நோர்வூட்டுக்கு வந்துசென்றுள்ளார். ஆனால், இன்னும் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள், ஏப்ரல் என்றார்கள், தற்போது ஆகஸ்ட் மாதமும் வரப்போகின்றது. ஆயிரம் ரூபா மட்டும் வரவேயில்லை. எனவே, பொய்யுரைப்பவர்களை பாராளுமன்றம் அனுப்பினால் அவர்கள் மீண்டும், மீண்டும் பொய்யுரைக்கவே முற்படுவார்கள்.

எனவே, மக்களுக்கு சேவைகளை செய்துள்ள நாம் அவற்றை சுட்டிக்காட்டி உரிமையுடனேயே வாக்கு கேட்கின்றோம். பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் எமது சேவைகள் தொடரும். தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் வெற்றிபெறுவார்கள். சலுகைகளுக்காக பேரம் பேசமாட்டோம். மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கவே பேரம் பேசுவோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles