அரச கூட்டணிக்குள் கருத்து மோதல் – ஒப்புக்கொண்டார் மஹிந்தானந்த

” அரச கூட்டணிக்குள் கருத்து மோதல் இருப்பது உண்மைதான். மாகாணசபைத் தேர்தலை முறைமை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைத்த திட்டத்துக்கு பங்காளிக்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனவே, 19 ஆம் திகதி பிரதமர் தலைமையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. அதன்பின்னர் சுமூக நிலை உருவாகும்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் நிலை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கைகள் இருக்கின்றன. எனவே, கொள்கை ரீதியிலான முரண்பாடொன்றை தற்போது ஏற்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக மாகாணசபைத் தேர்தலை மையப்படுத்தியே அந்த பிரச்சினை எழுந்துள்ளது.

70 இற்கும் 30 என்ற அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கான திட்டம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் ஒரு கட்சி மூவரை நிறுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த யோசனைக்கே பங்காளிக்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் பேச்சு நடத்தி இணக்கப்பாடொன்றுக்கு வரமுடியும் என நம்புகின்றோம். பிரதமர் தலைமையில் 19 ஆம் திகதி நடைபெறும் சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்படலாம்.

மாகாணசபைகளுக்கான தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். ஒன்றாக இணைந்தே மே தினம் அனுஷ்டிக்கப்படும். பங்காளிக்கட்சிகள் தனியாக நிகழ்வுகளை நடத்தமாட்டா. கருத்து மோதல் பேச்சு மூலம் தீர்க்கப்படும். கூட்டணியாக முன்னோக்கி பயணிப்போம்.” – என்றார்.

Related Articles

Latest Articles