மலையக மக்கள் முன்னணியை ஊவா மாகாணத்தில் எந்த காரணம் கொண்டும் பின்னடைவை சந்திக்க விடமாட்டோம். நாங்கள் கடந்த காலங்களில் செயற்பட்டதைவிட மிகவும் வேகமாக எதிர்காலத்தில் செயற்படுவோம். கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகள் திருத்தப்படும்.என மலையக மக்கள் முன்னணியின் செயலாளரும் பேராசிரியருமான விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.
பதுளையில் மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தை திறந்து வைத்த பின்பு அங்கு உரையாற்றும் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்
கடந்த காலங்களில் மலையக மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்திற்கும் பதுளை காரியாலயத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருந்தது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இந்த நிலைமை இனிமேல் தொடராது. நாங்கள் நேரடியாக களத்தில் இறங்கி எங்களுடைய சேவைகளை தொடருவோம்.அதே போல எங்களுடைய கட்சியின் தலைவரும் மாதம் ஒருமுறை இந்த பகுதிக்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்பை முன்னெடுப்பார்.
இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவன் என்ற வகையில் இந்த மன்னுக்கும் மக்களுக்கும் சேவை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.அதற்கான தகுதியும் அனுபவமும் எனக்கு இருக்கின்றது.
நான் மலையக மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அதன் ஸ்தாபக தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனுடன் நெருங்கிய உறவு கொண்டவன் என்ற வகையில் அவருடைய அரசியல் தீர்க்கதரிசனம் பிரச்சினைகளை கையாளும் முறை என்பவற்றை அருகில் இருந்து பார்த்தவன் என்ற அந்த அனுபவத்தை அதிகம் பெற்றுள்ளேன்.
இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த என்னை ஒருகாலத்தில் ஒரம் கட்டினார்கள் ஆனால் நான் இன்று விருட்சமாக வளர்ந்து அவர்கள் முன் நிற்கின்றேன்.எனவே எந்த ஒரு விடயத்திற்கும் பொறுமையும் சகிப்புத் தன்மையும் தேவை என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கின்றேன்.
நான் மலையக மக்கள் முன்னணியில் ஒரே நாளில் செயலாளர் நாயகமாக வரவில்லை.அதற்காக நான் பல விட்டுக் கொடுப்புகளையும் பல சவால்களையும் சந்தித்திருக்கின்றேன்.
எங்களுடைய மலையக மக்கள் முன்னணியில் முழுமையான ஜனநாயகம் இருக்கின்றது.அந்த விடயத்தில் எங்களுடைய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் மிகவும் விட்டுக் கொடுப்புடனும் தன்மையாகவும் நடந்து கொள்கின்றார்.ஒரு சிறந்த அனுபவத்தை கொண்ட ஒருவரே எங்களுடைய தலைவர் அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் மலையக மக்கள் முன்னணி எதிர்காலத்தில் பாரிய வளர்ச்சி பெறும்.
ஊவா மாகாணத்தில் இன்னும் பல அனுபவம் வாய்ந்தவர்களை அரசியலுக்கு கொண்டு வந்து வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.அந்த விடயத்தை நாங்கள் எதிர்காலத்தில் செய்வோம்.
ஊவா மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து சிறுபான்மை கட்சிகளையும் அனைத்துக் கொண்டு முன்நோக்கி செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய கட்சியின் நோக்கமாகும்.அதற்கு காரணம் நாங்கள் எங்களுடைய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இணைந்து செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
நாங்கள் பிரிந்து நின்றால் எதனையும் சாதிக்க முடியாது.இந்த அரசாங்கம் எங்களுடைய மக்களுக்கு என்ன செய்திருக்கின்றது.இதுவரையில் காத்திரமான ஒரு செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை.எனவே எதிர்காலத்தில் எதுவும் நடைபெறும் என்றும் எதிர்பார்க்க முடியாது.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
