ஆயிரம் ரூபா விவகாரத்தில் இ.தொ.கா. ‘பெயில்’!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்கும் விடயத்திலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தோல்வி கண்டுள்ளது – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தொழில் சுமை எதுவும் அதிகரிக்கப்படாமல், முன்னர் செய்த வேலையின் அளவுக்கே இந்த சம்பள உயர்வு பொருந்தும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்திருந்தாலும், தோட்ட நிர்வாகத்தால் தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாளொன்றுக்கான பெயருக்கு 20 கிலொ பறிக்க வேண்டும் என நிர்வாகங்கள் வற்புறுத்தும் அதேவேளை, தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களுக்கும் வேட்டு வைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

” அரச மற்றும் தனியார் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆயிரம் கிடைக்கும் என்ற அறிவிப்புகள் வெளியானபோதும் மஸ்கெலியாவிலுள்ள சில தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கும் குறைவாகவே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. சில தோட்டங்களில் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததால் சந்தா அறவிட்டு வழங்கும் நடைமுறையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே, சம்பள அதிகரிப்பு பொறிமுறையை இ.தொ.கா. வெற்றிகரமாக அமுல்படுத்தவில்லை. சம்பள விவகாரத்திலும் அக்கட்சி அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் தோல்வி கண்டுள்ளது.” – எனவும் திகா அணி உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

 

Related Articles

Latest Articles