நாட்டில் கடந்த 13 ஆம் திகதி இரவு 11 மணி முதல் விதிக்கப்பட்டிருந்த தொடர் பயணத்தடை இன்று காலை 4 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், இன்றிலிருந்து புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.
இதன்படி இரவு 11 மணி முதல் காலை 4 மணிவரை நாளாந்தம் 5 மணிநேரம் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என்பதுடன், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே வீட்டிலிருந்து வெளியேற வேண்டும்.
அரச, தனியார் துறைகளில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது எனவும், பொருட்கள் கொள்வனவு உட்பட இதர விடயங்களுக்காக வெளியேறுபவர்களுக்கே இந்த நடைமுறை பொருந்தும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் ஒன்றை எண்ணாக இருப்பவர்கள் (1,3,5,7,9) ஒற்றை இலக்க நாளிலும், இறுதி இலக்கம் இரட்டை எண்ணாக இருப்பவர்கள் ( 2,4,6,8) இரட்டை இலக்க நாளிலும் வெளியே செல்லாம். பூஜ்ஜியமும் (0) இரட்டை எண்ணாகவே கருதப்படும்.
அத்துடன், மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
