இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஆதரவாளர்களுள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ஜீவன் தொண்டமானின் கரங்களைப்பலப்படுத்துவதற்காக மீண்டும் தாய்வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் காங்கிரஸின் ஆளணி பலம் மேலும் அதிகரித்துள்ளது.
காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஆதரவாளர்கள் மீண்டும் கட்சிக்குள் வரவேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளராக பதவியேற்றபோது ஜீவன் தொண்டமான் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.
அத்துடன், தமது ஆதரவாளர்கள் சலுகைகளைப்பெறுவதற்காக காங்கிரஸைவிட்டு வெளியேறவில்லை எனவும், தலைவரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றதே என்ற ஆதங்கம்தான் அவர்களை வெளியேற வைத்தது எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியிருந்தார். தலைவருக்கும், மக்களுக்குமிடையிலான நேரடி உறவு எவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் சிலரால் துண்டிக்கப்பட்டது என்பதையும் விபரித்திருந்தார்.
இதனையடுத்தே பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்தும், காங்கிரஸ் என்ற மலையகத்தின் தாய்க்கட்சியை பலப்படுத்துவதற்காகவும் ஆதரவாளர்கள் மீண்டும் இ.தொ.காவை நோக்கி வருகைதந்த வண்ணமுள்ளனர்.
குறிப்பாக ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறும் பிரச்சாரக்கூட்டங்களின்போது அவரை நேரில் சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்திவருவதுடன், இம்முறை ஒருவிரல் புரட்சிமூலம் இ.தொ.காவை உச்சத்தில் வைப்போம் எனவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இவ்வாறு இற்றைவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காங்கிரசுக்கு மீண்டும் வந்துள்ள நிலையில் அடுத்துவரும் நாட்களிலும் பலர் தாய்வீடு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
” காங்கிரஸ் என்பது எமது அடையாளம், மலையக மக்களின் தாய்க்கட்சி அது. எங்கள் குடும்பமாகவே அதனை கருதுகின்றோம். சிறிதுகாலம் ஒதுங்கியிருந்தாலும் காங்கிரஸை மறக்கவில்லை. தலைவரிடம் எம்மை சிலர் நெருங்கவிடவில்லை. தலைவரை சந்திப்பதற்குகூட பல தடவைகள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தியாலேயே விலகியிருந்தோம். ஆனால், உண்மை என்னவென்பதை பொதுச்செயலாளர் தெளிவுபடுத்திவிட்டார்.மீண்டும் வந்துவிட்டோம். இனி காங்கிரசுடன்தான் எமது பயணம்.” – என்று ஆதரவாளர்கள் கருத்து வெளியிட்டனர்.
அதேவேளை, கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு, தலைவரின் முதுகில் குத்தும் விதத்தில் கட்சிதாவியோருக்கு இ.தொ.காவில் இடமில்லை எனவும் ஜீவன் தொண்டமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.