‘மலையக சிறுமி அகால மரணம்’ – மனோ, உதயா பொலிஸ் நிலையம் சென்று ஆய்வு

கடந்த 3ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதுர்தீன் இல்லத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்த டயகம பகுதியை சேர்ந்த ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியும், நுவரேலிய மாவட்ட தமுகூ எம்பி உதயகுமாரும், இன்று (ஜூலை 18) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பொரளை பொலிஸ் நிலையம் சென்று இதுவரை நடைபெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில் கேட்டறிந்தனர்.

பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம கண்காணிப்பாளர் (சிஐ) துமிந்த பாலசூரிய மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதம கண்காணிப்பாளர் (சிஐ) இனோகா ஆகியோரை சந்தித்த எம்பீக்கள் இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை நடந்துள்ள விசாரணைகள் பற்றியும், மரணமானவரின் உடற்கூற்று சட்ட மருத்துவ அறிக்கை தொடர்பிலும் முழுமையாக கேட்டறிந்தனர்.

முன்னதாக மரணமடைந்த பெண் ஹிஷாலினியின் சொந்த ஊர் மற்றும் அவரது பெற்றோர் வசிக்கும் நுவரேலியா மாவட்ட டயகம பிரதேசத்தை கண்காணிக்கும் டயகம பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி பொலிஸ் கண்காணிப்பாளர் (ஐபி) பாலிதவை தொலைபேசியில் அழைத்த மனோ கணேசன் எம்பி, ஹிஷாலினி உட்பட, இத்தகைய வீட்டு பணியாளர்களை கொழும்பு மற்றும் நகர்புற இல்லங்களுக்கு பணியாளர் தொழிலுக்காக கொண்டு சென்று சேர்த்த, இப்பகுதியை சேர்ந்த சங்கர் என்ற தரகரிடம் உடனடி வாக்குமூலம் பெற்று விசாரணைகள் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

தற்போது சங்கர் என்ற இந்த தொழில் தரகர் நாளை (ஜூலை 19) திங்கட்கிழமை மேலதிக விசாரனைகளுக்காக, கொழும்பு பொரளை பொலிசாரினால் கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறார்.

இந்நிலையில், ஹிஷாலினி என்ற இந்த பெண்ணின் அகால மரணம் தொடர்பில் பொது வெளியில் நிலவும் கருத்துகள் சம்பந்தமாக கண்டி மாவட்ட தமுகூ எம்பி வேலு குமார், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியுடன் கலந்தாலோசித்தார்.

இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதுர்தீனின் குடும்பத்தவர் மற்றும் பதுர்தீன் எம்பி தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, அவர்கள் தரப்புகள் தொடர்பிலான முழுமையான விபரங்களை ஒரு எழுத்துமூல அறிக்கையாக உடன் வெளியிடும்படி, வேலு குமார் எம்பி சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles