டயகம சிறுமி கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பணிக்கு அமர்தப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவத்தைப் போன்று இன்னுமொரு சம்பவம் பதிவாகக் கூடாது என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவோருக்கு எதிராக தற்போதிருக்கும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டயகம சிறுமி ஹிஷானியா வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தபோது உயிரிழந்த சம்பவம் குறித்தும், சிறுவர் தொழிலாளருக்கு எதிரான சட்டங்கள் குறித்தும் தொழில் அமைச்சுடன், செந்தில் தொண்டமான் பேச்சு நடத்தியுள்ளார்.
தற்போதுள்ள சிறுவர் தொழில் வழங்குநருக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இதுகுறித்து தொழில் அமைச்சுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
அத்துடன் மலையகத்தில் அனைத்து பிள்ளைகளும் 16 வயது வரை பாடசாலைக் கல்வியைத் தொடர்வதை கட்டாயமாக்க வேண்டும். இதில் பெற்றோர் அதிக அக்கறை கொள்ளவேண்டும்.
பாடசாலையில் இடைவிலகும் சிறுவர்களை பள்ளிக்கு மீண்டும் அழைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். இதனை அதிபர்கள் அவதானிக்க வேண்டும். அவ்வாறு இல்லாது அவர்களை கொழும்பிற்கு வேலைக்கு அனுப்பிவைக்கும் பெற்றோருக்கு எதிராகவும், அழைத்துச் செல்லும் முகவர்களுக்கு எதிராகவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
16 வயது இளம் சிறுமியின் இழப்பில் உள்ள மர்மங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக மரண விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டிக்கத் தக்கது.” என்று பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.