வீட்டுப் பணியாளர்களாக தொழில்புரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அடையாளம் காண்பதற்கு மேல் மாகாணத்தில் இன்று முதல் சிறப்பு பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த சில நாட்களில் வீட்டுப் பணியாளர்களாக தொழில்புரியும் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
கடந்த ஆறு மாதங்களுக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்கள் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 4,740 முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சிறுவர்களை வீட்டுப் பணியாளர்களாகப் பயன்படுத்துகின்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.