கம்பனிகளின் கொட்டத்தை அடக்க ஓரணியில் திரள்வோம் – சதாசிவம் அறைகூவல்

பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தையும் சர்வாதிகார போக்கையும் ஒழிப்பதற்கு அனைவரும் தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து போராட்டத்தில் களம் இறங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.

நுவரெலியா கூட்டுறவு சங்க சுற்றுலா விடுதியில் நேற்று (26.7.2021) திங்கட்கிழமை நடைபெற்ற தோட்ட கமிட்டி தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்துக்கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய பொழுது இவ்வாறு கூறினார்.

இதன் போது டயகம மேற்கு பிரிவைச்சேர்ந்த 16 வயது ஹிஷாலினி சிறுமியின் மறைவையொட்டியும் கெப்பிடல் மாராஜா நிறுவனத்தின் குழு தலைவர் ஆர். மகேந்திரனின் மறைவையோட்டியும் ஆத்மா சாந்திக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடிதனத்தையும் சர்வாதிகார போக்கையும் ஒழிப்பதற்கு தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து போராட்டத்தில் களம் இறங்க வேண்டும்.

அவ்வாறு களம் இறங்கும் பட்சத்திலேயே தொழிலாளர்கள் ஒற்றுமையை வெளிக்காட்டி அதன் மூலம் ஒன்று சேர்ந்து உரிமைகளை பெற்றெடுக்க முடியும் என்றும் இல்லாதவாறு தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு தோட்டங்களில் வேலை பளூவை அதிகரித்துள்ளது.

இதனால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தொழிலாளர்களுக்கு குடும்ப சுமைகளும் அதிகரித்துள்ளது. அதேவேளை தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளும் நிறுத்தியுள்ளது. ஒரு சில தோட்டங்களில் 20 கிலோவிற்கு குறைவாக கொழுந்து பறித்தால் அரை நாள் சம்பளம் வழங்கப்படுகிறது. சந்தா பிடிப்பதில்லை தோட்ட நிர்வாகம் சர்வாதிகாரமாக செயல்படுகின்றது.

தோட்டங்களில் தற்பொழுது சந்தா பணம் பிடிக்காததால் தோட்டத் தொழிற்சங்க தலைவர்கள் தோட்ட நிர்வாகத்துடன் தொழில் பிணக்குகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தைக்கு செல்லும் பொழுது தோட்டத்தில் தொழிற்சங்க சந்தா பிடிப்பதில்லை. ஆகையால் உங்களை தொழிற்சங்க தலைவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாதென கூறி பேச்சுவார்த்தை நடத்தாது தோட்ட நிர்வாகத்தினர் புறக்கணிக்கின்றனர்.

அந்தவகையில் தோட்டங்களில் தொழிற்சங்கங்களை செயலிழக்க தோட்ட நிர்வாகம் திட்மிட்டு செயல்படுகின்றது. அத்துடன் தொழிலாளர்களின் தொழில் உரிமை விடயங்களில் தான்தோன்றித்தனமாக செயல்படும் நிலையும் உள்ளது. இந்த நிலையில் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் தகுந்த பாடம் புகட்டுவதற்கு தொழிற்சங்க அரசியல் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு போராட்டம் நடத்த களம் இறங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles