ஐக்கிய தேசியக்கட்சியானது இனவாதம் மற்றும் மதவாதத்தை கொண்டல்லாமல் எப்போதும் சமத்துவத்தை ஏற்படுத்திய தனித்துவமான கட்சியாகும். தமிழ், முஸ்லிம் தலைவர்களும் இந்த கட்சியில்போட்டியிட்டுதான் வெற்றிபெற்றனர். இவ்வாறு துணையாக இருந்த கட்சியை கைவிட்டுவிட்டு, நன்றி மறந்து இன்று சஜித் அணியில் இணைந்துள்ளனர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் சண். பிரபா தெரிவித்தார்.
அட்டுளுகமவில் நேற்று பெருமளவாக ஐ.தே.க ஆதரவாளர்கள் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
” ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து நன்றியுணர்வுடன் மக்களுக்கு சரியான சேவைகள் செய்யாது, வெற்றி பெறுவோமா என்ற அச்சத்திலேயே சஜித் அணியில் இணைந்துள்ளனர். ஆனால், இதுவரை காலமும் நன்றி உணர்வுடன் இருந்தவர்கள் ஐ.தே.வுடன் இணைந்திருப்பார்கள்.
தற்போது முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்பு இடம்பெறும் இக்கூட்டத்தில், பாலித தெவரப்பெரும ஒரு பௌத்தராக இருந்தாலும் கூட அவருடன் முஸ்லிம்களும் இணைந்திருப்பதும் முஸ்லிம்கள் மனதில் அவர் இடம்பிடித்திருப்பதும் தேசிய ரீதியில் சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கு உந்து சக்தியாக இருக்கின்றது.
முஸ்லிம் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் பாலித்த தெவரப்பெருமவிற்கு வழங்கப்படும் பேராதரவு மகிழ்ச்சியைத் தருகிறது. அவருடன் இணைந்து சிறுபான்மை தமிழ்மக்கள் பிரதிநிதியாகிய என்னையும் இதில் இணைத்து இங்கு மூவினத்தையும் ஒன்றாக இணைத்திருப்பது தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதாக இருக்கின்றது.
தங்களை வளர்த்துக்கொள்கின்ற இனவாத தமிழ் , முஸ்லிம் தலைமைகளுக்கு அப்பால் சென்று தேசிய ரீதியான ஒற்றுமையை நாம் கட்டியெழுப்புவோம். இதற்கு ஐக்கியதேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவோம்.” – என்றார்.