கொரோனா ஒழிப்பு செயலணியிலுள்ள உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டும். முதுகெலும்புள்ள துறைசார் நிபுணர்களே குறித்த செயலணிக்கு நியமிக்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதே ஒரே வழியென அரச மருத்துவ அதிகாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் ருக்ஷான் பெல்லன கூறியவை வருமாறு,
“ கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினையின்போது ஆரம்பம் முதல் இன்றுவரை சொதப்பல் நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. செயலணி மற்றும் குழுக்களில் அங்கம் வகித்தவர்கள் முதுகெலும்புடன் செயற்பட்டிருந்தால் இன்று இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது. அரசியல் மற்றும் தொழிற்சங்க மயப்படுத்தல் காரணமாகவே கடும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
2020 இல் வைரஸ் பரவலின் ஆரம்பத்தில் நிலைமை மோசமாக இருக்கவில்லை. கடும் பயணக்கட்டுப்பாட்டை விதித்திருந்தால் நிலைமையைக் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலை இருந்தும் 3 மாதங்களுக்கு நாடு மூடப்பட்டது. துறைசார் நிபுணர்கள்கூட இந்த யோசனையை முன்வைக்கவில்லை. தொழிற்சங்கமொன்றும், கையாட்கள் சிலரும் முன்வைத்த பரிந்துரையின் பிரகாரமே நாடு முடக்கப்பட்டது. இதனால் 900 பில்லியன் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
ஆனால் இன்று வைரஸ் தொற்று சமூகத்தொற்றாகியுள்ளது. அடுத்துவரும் நாட்கள் பயங்கரமானவை. தற்போதைய டெல்டா தொற்று திரிபடையலாம். அதனால் ஏற்படும் பாதிப்புகள் எவ்வாறு அமையுமென தெரியவில்லை. நிலைமை நிலைமைக்கு பொறுப்புக்கூறவேண்டியது யார்? அந்த குழு தான். கொரோனா ஒழிப்பு செயலணி கலைக்கப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அவர்களை விலக்க வேண்டியதில்லை. அந்த குழுவில் உள்ளவர்கள் பதவி விலக வேண்டும்.
அதன்பின்னர் விசேட வைத்தியர்கள் உட்பட முதுகெலும்புள்ள துறைசார் நிபுணர்கள் குறித்த குழுவுக்கு நியமிக்கப்படவேண்டும். எங்கு தவறிழைக்கப்பட்டது என்பது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு தவறுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கி பயணிக்க வேண்டும்.” – என்றார்.
		









