கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. தொற்றுநோய் பிரிவின் இரு விசேட வைத்தியர்களும், உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவருடன் இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர் – என்று அரச பங்காளிக்கட்சியான தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் கூறியவை வருமாறு,
“ கம்பஹா மாவட்டத்தில் சில நாட்களுக்குள் 12 ஆயிரத்து 555 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்று கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற கம்பஹா மாவட்ட செயலணிக் கூட்டத்தில் உறுதியானது. குறித்த தொற்றாளர்களில் 4 ஆயிரம் பேர்வரையிலேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு 4 ஆயிரம் பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், கம்பஹா மாவட்டத்தில் பதிவாகிய தொற்றாளர்கள் என சுகாதார அமைச்சால் வெளியிட்பபட்ட எண்ணிக்கையை கூட்டினால் 3ஆயிரம்வரைதான் வருகின்றது. எனவே, யாரை ஏமாற்றுவதற்கு இங்கு முயற்சி எடுக்கப்படுகின்றது? திட்டமிட்ட அடிப்படையில் தரவுகள் மாற்றியமைக்கப்படுவது இதன்மூலம் உறுதியாகின்றது.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் 2 ஆயிரத்து 669 தொற்றாளர்கள் என்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல ஆகஸ்ட் 6 முதல் 11வரை நாளாந்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் 3 ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் என்ற அடிப்படையிலேயே அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனவே, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான நாளாந்த தகவல்களை மாற்றியமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது என்பது உறுதியாகின்றது. ஆய்வுக்கூட பரிசோதனை முடிவுகள் குறிப்பிட்ட சிலரின் கைகளுக்கு மட்டுமே செல்லும் நிலைமை காணப்படுகிறது. யார் இவ்வாறு தவறான தகவல்களை வழங்குவது, அவர்களின் நோக்கம் என்ன?
சுகாதார அமைச்சின் விஞ்ஞான தொற்று நோய் பிரிவின’ விசேட வைத்தியர்கள் இருவரும், இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரி ஒருவருமே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. இந்த இராணுவ அதிகாரி யாரென்பது இராணுவத் தளபதி தேடிபார்க்க வேண்டும்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை ஸ்தம்பிதமடைய செய்வதே இம்மூவரினதும் நோக்கமாக உள்ளது. வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில்தான் ஜனாதிபதி முடிவுகளை எடுக்கின்றார். எனவே, ஜனாதிபதியையும் தவறாக வழிநடத்துகின்றனர். ஆட்சியை ஸ்தம்பிதமடைய வைக்கவும், மக்களை பலிகடாவாக்குவதற்கும் இவ்வாறான நடவடிக்கைமூலம் முயற்சி எடுக்கப்படுகின்றது. எதிரணியின் தேவையை நிறைவேற்றும் பணியும் இடம்பெறுகின்றது.
தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, மரண விகிதத்தை அதிகரித்து காண்பிக்கும் சூழ்ச்சித் திட்டமும் இதன் பின்னணியில் உள்ளது. எனவே, தொற்று நோயுடன் விளையாட முற்படும் இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.
