மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையைப் பிரதேச மக்கள் உரிய வகையில் பயன்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது:
மூன்று மாடிக் கட்டிடங்களைக் கொண்ட மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலை புனரமைக்கப்பட்டு நீண்ட காலமாகியும் இது வரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பாக அண்மையில் நான் பாராளுமன்றத்தில் உரையாற்றினேன்.
மேலும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனின் நேரடி கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு வந்துள்ளேன்.
இதனைத் தொடர்ந்து மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் டொக்டர் நிஹால் வீரசூரியவின் கவனத்துக்கு கொண்டு சென்ற சுகாதார இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையை உடனடியாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதற்கேற்ப மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் ஊடாக பிரதேச மக்கள் முறையான வைத்திய சேவைகளை விரைவாக பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.










