நான்கு அலைகளுக்கும் அரசே பொறுப்பு கூற வேண்டும் – சம்பிக்க வலியுறுத்து

கொரோனா வைரஸ் தாக்கத்தின் நான்கு அலைகள் உருவாகுவதற்கு அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளே பிரதான காரணம். எனவே, போலியான முறையில் நாட்டை மூடாமல், விஞ்ஞானப்பூர்வமான ‘லொக்டவுனை’ செய்யுங்கள். இல்லையேல் நிலைமை மோசமாகும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாடு தற்போது எச்சரிக்கை மட்டத்திலேயே இருக்கின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையில் விஞ்ஞானப்பூர்வமாக நாட்டை முடக்குமாறு துறைசார் நிபுணர்கள் உட்பட பல தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால் நாடு முறையாக முடக்கப்படவில்லை. தமக்கு தேவையான இடங்களை அரசு திறந்தே வைத்துள்ளது. இவ்வாறு பகுதியளவு நாட்டை முடக்குவதால் உரிய பயன் கிட்டாது. தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண எண்ணிக்கையை குறைக்க முடியாது.

நாட்டை முடக்கும் தீர்மானம் ஜுன் மாதமளவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இழுத்தடிப்புகள் செய்யப்பட்டு இறுதி நொடியிலேயே பெயருக்கு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை இவ்வாறு போலியான முறையில் முடக்குவதால் உரிய பயன் கிட்டாது. பொருளாதார பாதிப்புகள் மட்டுமே ஏற்படும் என்பதை ஆளுந்தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன், தமது இயலாமையாலும், முறையற்ற முகாமைத்துவத்தாலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு முடக்கவே காரணம் என்ற கருத்தை உருவாக்கும் முயற்சியிலும் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.

இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தொற்று வேகமாக பரவிவருகின்றது. அங்கிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவந்து புதிய திரிபுகளை உருவாக்குவதற்கும் அரசு முற்படுகின்றது. எமது நாட்டு மக்களை ஆய்வுக்கூட எலிகளாக்குவதற்கான முயற்சியா இது?

நாம் ஆட்சியை கவிழ்க்க முற்படவில்லை. மாறாக சுகாதார துறை நிபுணர்கள் உட்பட துறைசார் நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படுமாறே அரசை கோரிவருகின்றோம். ஆனால் அவர்கள் எதிரணியில் இருக்கும்போது போலிகளை பரப்பி, ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டனர்.

இந்நாட்டில் நான்கு அலைகள் ஏற்படுவதற்கும் இந்த அரசுதான் காரணம். மரணங்களுக்கு அரசு பொறுப்புகூறவேண்டும். தடுப்பூசிகளை வாங்க சொன்னபோது, பாணிக்கு பின்னால் ஓடி காலத்தை இழுத்தடித்தனர்.

டொலர் பிரச்சினையால் மீண்டும் கூப்படம், வரிசை யுகம் உருவாகும் அபாயமும் உள்ளது.” – என்றார் சம்பிக்க. ” – என்றார்.

Related Articles

Latest Articles