தென்னிந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழகத்தின் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது இலங்கையில் மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பாகவும், மலையகத்தின் கல்வி அபிவிருத்திகள் தொடர்பாகவும் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்தோடு மலையகத்தில் அமையவுள்ள பல்கலைக்கழகத்திற்கும்,தமிழ்நாட்டின் அரசிற்கும் இடையே சுமூகமான கல்விசார் உறவை வளர்த்துக்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும், மலையகத்தின் கல்வி செயற்பாடுகளின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் இருவருக்கும் இடையில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
அத்தோடு இலங்கையின் மலையக சமூகத்தின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் தமிழ் நாட்டு அரசின் ஒத்துழைப்பானது தொடர்ச்சியாக கிடைக்கும் பட்சத்தில் எமது மலையக சமூகத்தின் கல்வி முறை மேலும் வளர்ச்சியடையும் எனவும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பின் மூலம் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழ் நாட்டின் அரசாங்கத்தின் ஊடாக பல்வேறு கல்விசார் அபிவிருத்திகள் இலங்கையில் மலையக மாணவர்களுக்கும் வந்தடையும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
