வாக்கு என்பது உங்கள் பலம் – உரிமை. எனவே, அதனை முறையாக அளிக்கவேண்டியதும் உங்கள் பொறுப்பாகும்.
பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற பின்னர், உங்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில் முதலில் தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்துக்கு முன்னால் புள்ளடி (X) இடவேண்டும்.
அதன்பின்னர் அக்கட்சியில் போட்டியிடும் மூவருக்கு விருப்பு வாக்குகளை வழங்கலாம். வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மேல் புள்ளடி இடவேண்டும்.
மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்தமுடியாது. நீங்கள் விரும்பும்பட்சத்தில் ஒருவருக்கு மாத்திரம் விருப்பு வாக்கை வழங்கலாம். ( அவ்வாறு வழங்கினால் மூன்று வாக்குகளும் அவருக்கு சென்றடையும் என அர்த்தப்படாது)
கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுக்கு முன்னால் புள்ளடி இடாமல் விருப்பு வாக்கு பயன்படுத்தப்படுமானால் அந்த வாக்கு நிராகரிக்கப்பட்ட வாக்காகவே கருதப்படும். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்துவதும் பிழையான நடைமுறையாகும். புள்ளடி இடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் இடவும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த வாக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.
வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வதற்கு முன்னர் வாக்காளருக்கான அட்டை, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ( தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு….) இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
இம்முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே தேர்தல் நடைபெறுகின்றது. எனவே, முகக்கவசம் அணிந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுங்கள். வாக்களிப்புக்காக ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதால் இறுதிநேரம்வரை காத்திருக்காது முடிந்தளவு விரைந்துசென்று வாக்குரிமையை பயன்படுத்தவும்.
(வழமையாக காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையே வாக்களிப்பு இடம்பெறும். இம்முறை மாலை 5 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.