இ.தொ.காவை விமர்சித்து அரசியல் நடத்தும் ‘ஸ்டைலை’ மாற்றவும்!

“கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அதன் அங்கத்தவர்களை எந்தவிதமான ஆதாரமும் அற்ற பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது தொடர்பாக,  எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.”

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இ.தொ.காவின் இளைஞர் அணியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” நாட்டில் அதிதீவிரமாக பரவிவரும் நோய் தொற்றின் காரணமாக, அசாதாரண சூழ்நிலைகள் காணப்படும் வேளையில், எம் மக்களை பகடைக்காயாக பாவித்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இவ்வாறு ஆதரமற்ற தகவல்களை சமூகத்திற்கு கொண்டுச்சென்று அரசியல் இலாபம் தேடும் உங்களது செயற்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெருவாரியாக மக்கள் வாக்குகளை வழங்கி, அதன்மூலம் அமைச்சு பதவி பெற்ற அமைச்சருடன் கைக்கோர்த்து JEDB நிறுவனத்துக்கு சொந்தமான ஹந்தானை பிரதேச மக்களின் காணிகளை, குறிப்பிட்ட ஒரு மக்கள் பிரதிநிதி சூரையாடும்போது, நீங்கள் தரகராக செயற்பட்ட விதம் பற்றி மக்கள் நன்கு அறிவர்.

மேலும் கண்டி மாவட்டத்தில் தரம் குறைந்த வீடுகளைக்கட்டி, அந்த காலப்பகுதியில் JEDB தலைவராக செயற்பட்டவரின் ஒப்பத்துடன் வெற்று காட்போர்ட் அட்டைகளை காணி உறுதிப்பத்திரம் என கொடுத்து மக்களை ஏமாற்றும் பொழுது, நீங்கள் மௌனியாக இருந்தது உங்கள் கையாலாகாத தனத்தை எடுத்துக்காட்டியது மட்டுமல்லாது நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சி மற்றும் தலைவருக்கும் பெரும் இழுக்கை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இ.தொ.கா வை விமர்சித்து அரசியல் செய்யும் கலாசாரத்தை மாற்றி மக்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் சேவை செய்து நன்மதிப்பை பெற்றுகொள்ளும் ஒரு புதிய கலாசார உத்தியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதோடு எதிர்காலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சமூக பொறுப்பை அறிந்து பொய்க்குற்றச்சாட்டுகளை தவிர்க்குமாறு இளைஞர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles