ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் சச்சிதாநந்தன் தெரிவித்தார்.
கொட்டகலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அரசாங்கம் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸூடன் இணைந்து தோட்ட காணிகளை தனியாருக்கு விற்றுள்ளதாக குறிப்பிட்டு சில தோட்டங்களை குறிப்பிட்டார்.
இது ஒரு பாரிய பிரச்சினை. அவருக்கு அரசியல் செய்ய முடியாத நிலையினை மறைப்பதற்காக அதனை வேறு விதமாக வெளிப்படுத்துகிறார். மக்களுக்கும் சேவை செய்யவில்லை. மக்களிடத்திலும் செல்ல முடியாது. இ.தொ.காவை விமர்சித்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளார்.
இது தொடர்பாக நாங்கள் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம். எந்த ஒரு அடிப்படை தன்மையும் இல்லாமல் இவ்வாறான குற்றச்சாட்டினை முன்வைப்பது அநாகரிகமான செயல். ” – என்றார்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்










