நோர்வூட்டில் கசிப்பு காய்ச்சிய, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்படை தோட்டத்தில் உள்ள ஒரு கொட்டகையில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவை மீறி கசிப்பு உற்பத்தி செய்து வந்த இடத்தை திடீர் சோதனை நடத்திய போது 3,000 மில்லிலீட்டர் கசிப்பு மற்றும் 20,000 மில்லிலீட்டர் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கசிப்பை வடிகட்ட பயன்படும் சுருள்கள், பீப்பாய்கள், கேன்கள், எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு சிலிண்டரையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றினர்.

சந்தேக நபர் அப்பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு இதனை விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து, நோர்வூட் கியூ தோட்டம் சென்ஜோன்டிலரி பிரிவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவரையும் நேற்றிரவு நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர்களை எதிர்வரும் தினங்களில் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் மூலம் மத்திய மலைநாட்டில் உள்ள தோட்டப் பகுதிகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்துள்ளது என்று அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.

நிருபர்கள் – கே. சுந்தரலிங்கம், க.கிஷாந்தன்

Related Articles

Latest Articles