ஆறு வாரங்களுக்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி!

ஆறு வாரங்களுக்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி நிறைவுற்றிருக்குமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டில் பல கிராம சேவகர் பிரிவுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்கிறோம்.

சினோபார்ம் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதில் சில தாமதங்கள் ஏற்பட்டன. சீனாவில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்திருந்தமையால் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே இந்த மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

என்றாலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதால் தடுப்பூசி வழங்கும் பணிகள் மீண்டும் தாமதமின்றி முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சினோபார்ம் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கு உரிய வகையில் தடுப்பூசிகள் கிடைத்துவிடும்.

அதேபோன்று மாவட்ட மட்டத்தில் தரவுகளைப் பெற்றுக்கொடுக்கும் பணிகள் மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. தரவுகளை பெற்றுக்கொடுப்பதில் காணப்பட்ட சில சிக்கல்கள் காரணமாகவும் தடுப்பூசி வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டிருந்தது. 2012ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம்தான் தரவுகள் சேகரிக்கப்பட்டிருந்தன.

ஆனால், தற்போது சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் தரவுகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்திருந்தன. இக்குறைப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நிறைவுற்றிருக்கும்.

அரசாங்கத்தின் முதல் இலக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதாகவே இருந்தது. அதன் பின்னர் 30முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவது இலக்காக இருந்தது.

அந்தப்பணியும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆறுவாரங்களுக்குள் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை இறுதி செய்வதே அரசாங்கத்தின் அடுத்த இலக்காகும்.

இளையோருக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் வகைகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இவர்களுக்கு எந்தவொரு தடுப்பூசியையும் வழங்க முடியுமென உலகளாவிய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடு செல்பவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

Related Articles

Latest Articles