கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் துரோகங்களை அரங்கேற்றும் அரசு!

கொரோனா பெருந்தொற்று நெருக்கடி நிலைமையை தமக்கு  சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையிலான மிக மோசமான சட்டமூலங்களை தற்போதைய அரசு நிறைவேற்றிவருகின்றது. – என்று ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா பெருந்தொற்று நிலையால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தடுப்பூசி திட்டம்கூட தாமதமாகவே ஆரம்பமாகியது. தாமதித்தேனும் இந்நடவடிக்கை ஆரம்பமானதை வரவேற்கின்றோம். ஆனால் தடுப்பூசி திட்டத்தில் இன்றளவிலும் குளறுபடி தொடர்கின்றது. இதனால்தான் விசேட வைத்தியர் ஒருவர்கூட தொழில்நுட்ப குழுவில் இருந்து விலகியுள்ளார்.

தடுப்பூசி திட்டத்தின்போது சுகாதாரத் துறையினருக்கும்,  60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றே பரிந்துரைக்கப்பட்டிருந்தது. குறித்த பரிந்துரையை புறந்தள்ளிவிட்டு தடுப்பூசி விடயத்தில் அரசியல் தீர்மானமே எடுக்கப்பட்டன. 10 ஆயிரம் உயிர்கள் பறிபோனதற்கு இந்நிலைமையே காரணம். ஏனெனில் கொரோனா மரணங்களில் 80 முதல் 90 வீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

அதேவேளை, நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையிலான சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. கறுப்பு பணத்தைசட்டபூர்வமாக்குவதற்கான சட்டமூலம்கூட நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது கொரோனா நெருக்கடியைக்கூட தனக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களுக்கு துரோகமிழைக்கும் செயற்பாடுகளை அரசு தொடர்கின்றது.” -என்றார்.

Related Articles

Latest Articles