நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணத் தொகையாக 2ஆயிரம் ரூபா வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் மலையகத்தில் இந்த நிவாரணத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் 2ஆயிரம் ரூபா பெற தகுதி இருந்தபோதிலும் அவர்கள் அனைவருக்கும் கிடைக்காமை வேதனையளிப்பதாகவும் சமூக ஆர்வலர் எம். தீபன் தெரிவித்துள்ளார்.
இந்த நிவாரணத் தொகை கிடைக்காதவர்கள் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களுக்கு கடிதங்களைக் கொடுத்துள்ளனர். எனினும், அதற்கான எந்த பதிலும் வழங்கப்படவில்லை. கிராம உத்தியோகத்தருக்கும் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
அன்றாட தினக் கூலிகள், இசை கலைஞர்கள், மேசன் வேலை செய்வோர், கட்டிட வேலை செய்வோர் என பலரும் வருமானங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடிதங்களைக் கொடுத்துவிட்டு தமக்கு இந்த 2ஆயிரம் ரூபா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வளர் எம் . தீபன் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.
