இரு அமைச்சர்களுக்கு எதிராகவே நான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளேன். அந்த நிலைப்பாட்டில் இன்றும் இருக்கின்றேன். மாறாக அரசுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கோ, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கோ நான் சூழ்ச்சி செய்யவில்லை.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார தெரிவித்தார்.
அமைச்சர்களான காமினி லொக்குகே, சரத்வீரசேகர ஆகியோருக்கும், ஜகத் குமார எம்.பிக்குமிடையில் கருத்து மோதல் உச்சம் தொட்டுள்ளது. இதனால் அரசுக்குள் முறுகல் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஒரு சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே இரு அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட முன்வைத்தேன். அந்த நிலைப்பாட்டிலேயே இன்றும் இருக்கின்றேன். இது விடயத்தில் ஊடக கண்காட்சி எதுவும் இல்லை. உண்மையையே நான் சொன்னேன்.
எனது இந்த அறிவிப்பானது அரசை வீழ்த்துவதற்கோ அல்லது அரசுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையோ அல்ல. எமது அரசு கூட்டணி அரசாகும். எனவே, கருத்து சுதந்திரத்துக்கு இடமிருக்கின்றது. பல தரப்பட்ட கருத்துகள் வந்ததால்தால் மக்களுக்கு சிறப்பான தீர்வை முன்வைக்கலாம். அதற்கான சுதந்திரம் எமது கூட்டணியில் உள்ளது.
ஆனால் அவ்வாறான ஜனநாயக உரிமையை விரும்பாதவர்களே மேற்படி இரு அமைச்சர்கள். இன்று மட்டுமல்ல அன்று முதலலே நான் உண்மையைதான் பேசி வருகின்றேன். ஆசிரியர்கள் போராட்டத்தின்போது அவர்கள் கைது செய்யப்பட்ட விதத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன்.” -என்றார்.