2020 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சப்ரகமுவ மாகாணத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 28 ஆயிரத்து 631 மாணவர்களில் 19 ஆயிரத்து 113 பேர் சித்தியடைந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வித்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.
இதன்படி 9 ஆயிரத்து 518 பேர் இப்பரீட்சையில் சித்தியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க இம்முறை இம்மாகாணத்தில் இப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த தோட்டப்பகுதி மாணவர்களில் எண்ணிக்கையானது கடந்த வருடத்தை விட அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு, சூம் தொழிற்நுட்பத்தினூடாக நிகழ்நிலை வகுப்புக்களே கூடுதலாக நடைபெற்றன.
இவ்வாறான சூழ்நிலையில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தோட்ட மாணவர்களுக்குத் தொலைப்பேசி வசதிகள் மற்றும் அதற்கான சிக்னல் வசதிகள் உள்ளிட்ட பல வசதிகள் இல்லாத நிலையிலும் தோட்ட மாணவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இது வரவேற்கக்கூடியது என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த தகவலின்படி பெல்மதுளை நீலகம தமிழ் வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 23 மாணவர்களில் 14 பேர் சித்தியடைந்துள்ளனர்.
கீரைகலை தமிழ் வித்தியாலத்திலிருந்து தோற்றிய 10 மாணவர்களில் 8 மாணவர்கள் உயர் தரம் கற்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.
புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியலாயத்திலிருந்து தோற்றிய 30 மாணவர்களில் 18 பேர் சித்தியடைந்துள்ளனர்.
இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 81 மாணவர்களில் 25 மாணவர்கள் கணித பாடத்துடன் சித்தியடைந்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.