ஐ.நா. பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நல்லிணக்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான அழுத்தத்தை அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து பிரயோகிக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதாக இருந்தால் அதற்கு சபாநாயகரின் அனுமதி அவசியம். ஆனால் தற்போது அவ்வாறு நடப்பதில்லை. அந்த வகையிலேயே செல்வராஜா கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்தது சரியா, தவறா என்பதைவிட, அவர் கைது செய்யப்பட்ட விதம் தவறாகும்.
தற்போதைய சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை பாதுகாப்பதற்காக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை. அவர் நிச்சயம் பயன்படுத்த வேண்டும். இன ஒற்றுமை, நல்லிணக்கம் குறித்தெல்லாம் ஐ.நா.வில் ஜனாதிபதி உரையாற்றினார். ஆனால் இங்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுகின்றார். வெளிநாட்டில் ஒன்றைகூறிவிட்டு உள்நாட்டில் வேறொன்றை செயற்படுத்த அனுமதிக்ககூடாது.
எனவே, ஐ.நாவில் தான் குறிப்பிட்ட விடயங்களுக்கு ஜனாதிபதி செயல் வடிவம் கொடுக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை தமிழ்க் கட்சிகள் இணைந்து கொடுக்க வேண்டும்.” -என்றார்.