பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை தீவிரம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் 200 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருக்கின்றது. அது தொடர்பான கலந்துரையாடல்கள் மாகாண ஆளுநர்கள் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

அதன் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி இருக்கின்றார்.

இதுதொடர்பாக வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகள் உள்ளன. அனைத்து வலயங்களில் இருக்கும் பாடசாலைகளை ஒரே தினத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருக்கின்றோம்.

அத்துடன் மாகாணத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து பயணிக்கும் ஆசிரியர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சரிடம் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய போக்குவரத்து அமைச்சருடன் பேசி அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறையின் கீழ் தமது பயணத்தை மேற்கொள்ள முடியும்.

மேலும் ஆசிரியர்களுக்கு அவசர சுகாதார நடவடிக்கைகளுக்கு பயிற்சியளிக்க மாகாண சபையின் நிதியில் சுகாதாரத் திட்டங்களை முன்னெடுக்க உத்தரவிட்டிருக்கின்றேன். மேலும், ஒட்சி மீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களைப் பெற்று ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.

Related Articles

Latest Articles