பொலன்னறுவை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களைக் கைப்பற்றி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிநடை போட்டுள்ளது.மாவட்ட விருப்பு வாக்கு பட்டியலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 137 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் போரில் ஈடுபட்ட ரொஷான் ரணசிங்க 90 ஆயிரத்து 615 வாக்குகளைப்பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு வேட்புமனு வழங்கப்படக்கூடாது என ஆரம்பம் முதலே வலியுறுத்திவந்த ரொஷான் ரணசிங்க, மைத்திரியின் கடந்தகால அரசியல் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து – கழுவி ஊத்தினார்.
எனினும், மைத்திரிக்கு மொட்டு கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. மறுபுறத்தில் ரொஷான் ரணிங்கவை சமரசப்படுத்தவதற்காக மாவட்டத்தின் தலைமை வேட்பாளர் பதவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து தேர்தல் பரப்புரைகளின்போது இருவரும் கடும் சொற்சமரில் ஈடுபட்டனர். சரமாரியாக விமர்சனக் கணைகளையும் தொடுத்துக்கொண்டனர். ‘முட்டை அப்பம், ‘கழுகு கதை’ உட்பட மேலும் சில அறிவிப்புகளால் பொலன்னறுவை அரசியல் களம் அனல் கக்கியது.
இதில் குறிப்பாக மைத்திரிகூறிய கழுகு கதை அவருக்கே பெரும் தலையிடியை ஏற்படுத்தியது. திரும்பும் திசைகளியெல்லாம் மொட்டுக்கட்சி காரர்கள் அவரை விளாசித்தள்ளினர்.
” நீண்டநேரம் காத்திருந்து நீர்க்காகம் மீனை கொத்தினாலும், மேலே இருந்து தக்கதருணம் பார்த்து பறந்துவந்து கழுகு அதனை பறித்துசெல்லும். இம்முறை எனது தாக்குதல் வியூகமும் அவ்வாறே அமையும்.” – என்பதே மைத்திரி கூறிய கதையின் சாராம்சம்.
அதாவது ரொஷான் ரணசிங்க, மாவட்ட தலைவராக இருந்தாலும் மைத்திரிதான் தல என்பதையே இக்கதைமூலம் அவர் கூற முயற்சித்தார். ஆனால், இக்கதைக்கு கை, கால், மூக்கு, பொட்டு எல்லாம் வைத்து மொட்டு கட்சிக்காரர்கள் ஊதி பெருப்பித்து, மைத்திரிக்கு நெருக்கடி கொடுத்தனர். அவருக்கு வாக்களிக்ககூடாது எனவும் வலியுறுத்தினர்.
கடும் சவால்கள், தாக்குதல்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.