மலையக பெருந்தொட்டப்பகுதிகள் இராணுவ மயப்படுத்தப்படுவதாக உண்மைக்குப் புறம்பான கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் மலையக மக்களுக்கு எதிரான எந்தவொரு திட்டத்துக்கும் இ.தொ.கா. துணைபோகாது என பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எதற்கெடுத்தாலும் சிலர் அரசாங்கத்தை குறைகூறுகின்றனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது மலையகத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிகாலத்திலும் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக கடந்த ஆட்சியின்போது முன்னெடுக்கப்பட்ட வீட்டத் திட்டத்திலுள்ள வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, முழுமைப்படுத்தி மக்களிடம் ஒப்படைத்துவருகின்றோம். மலையக பெருந்தோட்டப்பகுதிகளில்
காபட் பாதைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பல அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இருந்தாலும் தோட்டப்பகுதி இராணுவ மயப்படுத்தப்படுவதாக போலியான தகவல் பரப்படுகின்றது. நாம் அரசாங்கத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எமது மக்களுக்கு பாதகமான திட்டங்களுக்கு துணைபோகமாட்டோம்.” – என்றார்.
