தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடிப் பரீட்சை: மலையகத்தில் 450 பாடசாலைகளில் நடத்த ஏற்பாடு

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றதான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவொளி முன்னோடிப் பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

மலையகமெங்கும் சுமார் 450 பாடசாலைகளில் ஏற்பாடாகியுள்ள இப்பரீட்சைக்கான வினாத்தாள்கள் குறித்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்றத்தின் பரீட்சைகள் மற்றும் கருத்தரங்குகள் பொறுப்பாளர்ளான ஆர். சுரேஷ்குமார் மற்றும் சங்கர் சுரேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் வருடாந்த செயற்திட்டங்களுள் ஒன்றான தரம் 5 புலமைப்பரிசில் “அறிவொளி” முன்னோடிப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. வினாத்தாள் விநியோகப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிபுணத்துவம் மிக்க ஆசிரியர்கள் குழாமின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வினாத்தாள்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவுள்ள முன்னோடிப் பரீட்சையில், இம்முறை 450-க்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 25,000 மாணவர்கள் பயன்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வகையில், எதிர்வரும் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பங்கேற்கும் அனைத்து பாடசாலைகளிலும் ஒரே நாளில் இம்முன்னோடிப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

தரம் ஐந்தைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் முதன்முறையாக எதிர்கொள்ளும் இம்முக்கியத்துவமிக்க பரீட்சையை எதிர்கொள்ளும் தருணத்தில் அவர்களை தொற்றிநிற்கும் அச்சம் மற்றும் பதற்ற நிலைமைகளை போக்குவதற்கும் இயல்பாக செயற்படுவதற்கும் இம்முன்னோடிப்பரீட்சை உதவியாக அமையும்.

மேலும் தகவல்களுக்கு 076 688 6900, 076 651 7322 மற்றும் 011 242 4886 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ளுமாறு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Latest Articles