“பாதாள குழுக்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது. முற்றாக துடைத்தெறியப்படும். மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை. போதைப்பொருள் வியாபாரமும் ஒழிக்கப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு,
“ எவரையும் அரசியல் ரீதியில் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இல்லை. விசாரணைகள் சிறப்பாக இடம்பெற வேண்டும். அந்த விசாரணைகளின் பிரகாரம் – சட்டத்துக்கமையவே தண்டனை வழங்கப்படுகின்றது. இது பழிவாங்கலா?
எமக்கு எவருடனும் தனிப்பட்ட குரோதம் கிடையாது. ஆனால் இந்த நாட்டை அழித்த ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
மகன் கொள்ளையடிக்கும்போது, மகனே அவ்வாறு செய்ய வேண்டாம் என தந்தை கூறி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், கைது செய்த பின்னர் அழுது அனுதாபம் தேடுவதில் பயன் இல்லை.
மகனுக்கு கொள்ளையடிக்க இடமளித்துவிட்டு, கைது செய்ததும் கண்ணீர் சிந்துகின்றனர். அனுதாபம்மூலம் இதனை தடுத்துவிடமுடியாது.” – என்றார் ஜனாதிபதி.










