நுவரெலியா மாவட்டத்தில், இராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய சீதாஎலிய பிரதேசத்தில் புகழ்பெற்ற சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள இவ்வாலயப் பகுதியில், நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்தும் நெரிசலும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் வீதி விதிமுறைகளை மீறுவதும், அதனால் ஏற்படும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மட்டுமன்றி, நடைபாதையைப் பயன்படுத்தும் பாதசாரிகளும் பாதசாரி கடவையை முறையாகப் பயன்படுத்தும் அப்பாவிப் பொதுமக்களும்கூட விபத்துகளுக்கு உள்ளாவதுடன், சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தற்போதைய சூழலில், நாம் மட்டும் வீதி விதிகளைப் பின்பற்றிப் பயணிப்பதால் மாத்திரம் விபத்துகளைத் தடுத்துவிட முடியாது என்ற நிலையே காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் மீது, வேகமாக வந்த முச்சக்கர வண்டி மோதியதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இருப்பினும், விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்தவரைக் கவனிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இப் பகுதியில் தொடர்ச்சியாக விபத்துகள் இடம்பெற்று வருவதனால், நுவரெலியா வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரும், வீதி அபிவிருத்தி அமைச்சும் இது குறித்துக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், விபத்துகளைத் தடுக்கப் பொருத்தமான நடைமுறைத் திட்டங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.










