ஆசியக் கிண்ணத்தை வெல்லுமா இலங்கை மகளிர் அணி? நாளை பலப்பரீட்சை

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான அரைஇறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்தியாவை  நாளை எதிர்கொள்கிறது.

இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா தனியொருவராகப் போராடி, பேட்டிங்கில் 47 ரன்களும், பந்துவீச்சில் 36 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ‘ஆட்டநாயகன்’ விருதை வென்றார். இருப்பினும், இலங்கை அணியின் கூட்டு முயற்சி பாகிஸ்தானின் வெற்றிக் கனவைத் தகர்த்தது.

சுழற்பந்தில் தடுமாறிய பாகிஸ்தான்

துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில், இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து மற்றும் சுகந்திகா குமாரி ஆகியோர் ஆரம்பத்திலேயே பாகிஸ்தானின் விக்கெட்டுகளைச் சரித்தனர்.

தொடர்ந்து 17 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளர் சாமுடி பிரபோதாவும் விக்கெட் வீழ்த்த, 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

பாத்திமா சனாவின் அதிரடி மீட்பு

அணியை மீட்கப் போராடிய கேப்டன் பாத்திமா சனா 36 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். குல் பிரோசா (21) மற்றும் துபா ஹாசன் (12) ஆகியோரின் துணையுடன் பாகிஸ்தான் அணி கடைசி 10 ஓவர்களில் 78 ரன்களைக் திரட்டி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை எட்டியது.

இலங்கையின் நிதானமான சேஸிங்

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கைக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பாத்திமா சனாவின் அபார பந்துவீச்சால் சமாரி அத்தபத்து உட்பட முன்னணி விக்கெட்டுகள் சரிந்து, 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடாமாறியது.

இருப்பினும், ஹர்ஷிதா சமரவிக்ரம (36) மற்றும் கவிஷா தில்ஹாரி (33) ஆகிய இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்து அணியை மீட்டனர். மீண்டும் பந்துவீச்சில் மிரட்டிய பாத்திமா சனா இவர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இருப்பினும், நிலக்ஷிகா சில்வா மற்றும் கௌஷினி நுத்யங்கனா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி 8 பந்துகள் மீதம் உள்ள நிலையிலேயே இலங்கையை வெற்றி இலக்கை (134/6) அடையச் செய்தனர்.

போட்டியின் இறுதியில் இலங்கை வீராங்கனைகள் வெற்றியைக் கொண்டாடிய நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத காட்சி ரசிகர்களை நெகிழ வைத்தது.

நாளை நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோத உள்ளன.

Related Articles

Latest Articles