பால்மா, கோதுமைமா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான புதிய விலைகள் நேற்று முன்மொழியப்பட்டன.கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கும், மேற்படி பொருட்களை இறக்குமதி செய்யும் சங்கங்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலையை 355 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 140 ரூபாவாலும் அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர் சங்கம் யோசனை முன்வைத்துள்ளன.
இதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் ஒரு கிலோ பால்மா ஆயிரத்து 300 ரூபாவுக்கும், 400 கிராம் பால்மா 520 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்.
அத்துடன், 50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்குமாறு சீமெந்து இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி ஆயிரத்து 205 ரூபாவுக்கு சீமெந்து விற்பனை செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

கோதுமா மாவின் விலையை 20 ரூபாவால் அதிகரிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றாலும் விலை தொடர்பான முன்மொழிவு குறித்த தகவல் வெளியாகவில்லை.
கோதுமை மாவுக்கு 87 ரூபா கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இனிமேல் அதனை 107 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை முடிவொன்றை எடுக்கும்.
பால்மா, கோதுமைமா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










