அரசாங்கம் எதற்கு, அமைச்சரவை எதற்கு? விலை உயர்வால் பொங்கினார் ராதா!

” பொருட்களின் விலை உயர்வைக்கூட இந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்தமுடியவில்லை. இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களும் விலையை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. அப்படியானால் அரசாங்கம் எதற்கு, அமைச்சரவை எதற்கு” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அட்டனில் இன்று (10.10.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைகளுக்கான தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்படும் என பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் என்பது ஜனநாயக அம்சம். எனவே, தேர்தல் நடைபெறுவதை நாம் வரவேற்கின்றோம். ஆதரவையும் வழங்குவோம்.

இந்தியாவின் அழுத்தத்தாலேயே தேர்தல் நடத்தப்படுகின்றது. ஆனாலும் அவ்வாறு இல்லை என வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். எம்மை பொறுத்தமட்டில் சர்வதேச அழுத்தத்தாலேயே தேர்தலுக்கான ஏற்பாடு இடம்பெற்றுவருகின்றது.

அதேவேளை, முன்னரெல்லாம் வரவு – செலவுத் திட்டம்வரும்போதுதான் பொருட்களின் விலை மறுசீரமைக்கப்படும். ஆனால் இன்று நாளாந்தம் அதிகரிப்பு இடம்பெறுகின்றது. இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களுமே விலையை நிர்ணயிக்கின்றனர். அப்படியானால் அரசாங்கம், அமைச்சரவை எதற்கு” – என்றார்.

க.கிஷாந்தன்

Related Articles

Latest Articles