மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்ட குயின்ஸ்லேன்ட் பிரிவில் தொடர் லயன் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 05 மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் அந்த மக்கள் படும் அவலங்கள் அறியாது நுவரெலியா மாவட்ட இராஜாங்க அமைச்சர் நித்திரையில் இருக்கிறாரா என தொ.தே.சங்கத்தின் மஸ்கெலியா பிரதேச இளைஞரணி தலைவர் கொம்பன் சசி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் முன்னால் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களால் கட்டப்பட்ட கிராமங்களை தமது முயற்சியில் கட்டியது போல தந்தை படத்தை காட்டி திறப்புவிழா செய்து வரும் இராஜாங்க அமைச்சர் மஸ்கெலியா குயின்ஸ்லேன் மக்களுக்கும் தீர்வு வழங்க வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற போது இதே பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது அப்போது அமைச்சராக இருந்த எங்கள் தலைவர் பழனி திகாம்பரம் அவர்கள் உடனடியாக அந்த மக்களுக்கு தனி வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கியதை உங்களாலும் மறுக்க முடியாது.
மொக்கா தோட்டத்தின் மிட்லோதியன் பிரிவிலும் தீ விபத்தில் எரிந்த லயன் குடியிருப்பை சேர்ந்தவர்களுக்கு தனி வீடுகளை அமைத்து கொடுத்த வரலாறும் எங்கள் தலைவருக்கு இருக்கிறது.
ஆகவே இப்போது ஆட்சியில் இருக்கும் நீங்கள் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த மக்களுக்கு தனி வீடுகளை உடனடியாக அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் மாடிலயன் குடியிருப்போ அல்லது லயத்தை மீள் திருத்தம் செய்து கொடுக்கவே எத்தனிக்க வேண்டாம் எங்கள் தலைவர் அமைத்து கொடுத்தது போல தனி வீடுகளை அமைத்து கொடுங்கள்.
இனியும் உங்கள் பொய்களை நம்பவோ அல்லது உங்கள் நாகரிகமற்ற அரசியல் செயற்பாடுகளை வாழ்த்தவோ மக்கள் தயாராக இல்லை ஆகவே இன்னொருவர் இட்ட தீ முற்றில் குளிர்காய நினைக்காமல் கிடைத்த அதிகாரத்தை வைத்து மக்களுக்கு சேவையை செய்யுங்கள்.
வீனான புகழாரம் வேண்டாம் காரணம் மக்கள் தெளிவாகதான் இருக்கிறார்கள்.
109000 மக்கள் வாக்குகளின் வலிமை இவ்வளவுதானா என நினைக்கும் போது வெட்கித் தலைகுனிய வைக்கிறது உங்கள் செயற்பாடுகள்.
குயின்ஸ்லேன் மக்கள் இருக்க இடமின்றி, உறங்க வீடின்றி, ஒரு வேளை சோற்றுக்கு உலை வைக்க இடமின்றி திண்டாடுகிறார்கள் ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாத இராஜாங்க அமைச்சர் வீடமைப்பில் தன் தந்தையின் சிலை வைக்க இடம் கேட்டு மண்டாடுகிறார்…!
இன்னொருவர் கட்டிய வீட்டை திறக்க ஆர்வம் காட்டும் அமைச்சர் வீடின்றி தவிக்கும் இந்த மக்களின் நிலையையும் கருத்திற் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
