‘நாட்டில் பஞ்சம் ஏற்படும்’ – அபாய சங்கு ஊதுகிறார் வடிவேல் சுரேஷ்

அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் விரைவில் நாட்டு மக்கள் பெரும் பஞ்சத்தால் வதைபடக் கூடும் என இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

” நாளுக்கு நாள் மக்களின் அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள்,மருந்து மாத்திரைகள் என அடுக்கடுக்காக விலைகளின் உச்சம் ஏறிய வண்ணமே உள்ளது. இது பற்றி அரசாங்கத்திடம் வினாவினால் ஒருவரை ஒருவர் குற்றஞ் சாடுவதும், “கழுவிய மீனில் நழுவிய மீன்” போல நடந்து கொள்வதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைக் கொணர்ந்துள்ளது.

விலை வாசி உயர்வு ஒரு பக்கம் இருக்கும் போது, மற்றொரு பக்கம் வாழ்வாதாராத்தின் அடிப்படையாகவுள்ள விவசாயிகளின் மடியில் அரசாங்கம் தற்போது கைவைத்துள்ளது. சர்வதேச அளவில் விவசாயிகளின் பிரச்சினை பேசப்பட்டு வரும் இச் சந்தர்ப்பத்தில் தற்போது நாட்டில் உரத்திற்கான தட்டுப்பாடானது விவசாயிகளின் மத்தியில் பெரும் அவல நிலையாகவுள்ளது.

குறிப்பாக மலையக மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை தேயிலை பயிர்ச்செய்கை,மரக்கறி உற்பத்தி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே வாழ்பவர்கள்.இவ்வாறு எம்மக்களையே தொடர்ந்தும் இவ் அரசாங்கம் குறி வைப்பது ஏன்?

சர்வதேச அளவில் பல மில்லியன் டொலர்களை அரசாங்கம் கடனாகப் பெற்றுக் கொண்ட போதிலும் மலையக மக்களுக்கு என எதுவித சலுகைகளும் வழங்கப்படவில்லை என்பது நிதர்சனமிக்க உண்மையாகும்.

தேர்தல் காலங்களில் அனுதாப வாக்கிற்காகவும்,அரசியல் சுய லாபத்திற்காகவும் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி விட்டு இன்று கமுக்கமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இங்கு அப்பாவி மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்தும் அரசாங்கம் தனது அசமந்த போக்கை தொடருமானால் நாட்டில் பட்டினிச் சாவு என்பது வெகு தொலைவில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.ஆகவே அரசாங்கம் மக்களுக்கான தீர்வை விரைந்து பெற்றுக் கொடுக்க வேண்டும். எனவும் வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles