கொழும்பு, ஒக்டோபர் 13: இலங்கையில் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான (MSMEs) நிதியளிப்பினை விரிவுபடுத்துவதற்காக, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) தனியார் துறை அபிவிருத்திச் செயற்திட்டமானது ஹற்றன் நஷனல் வங்கி பி.எல்.சி. (HNB) PLC உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
“எம்மில் எவரும் தனியாக அடைய முடியாத அளவிற்கு பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான தாக்கத்தை இவ்வாறான பங்காண்மைகள் வியத்தகு முறையில் மேம்படுத்தும்” என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான USAIDஇன் செயற்பணி இயக்குநர் ரீட் ஈஷ்லிமேன் கூறினார்.
“HNB உடனான இந்த பங்காண்மை மூலம், இலங்கையில் வெற்றிகரமான வர்த்தகங்களின் அடுத்த தலைமுறையினை நாம் வளர்க்கிறோம் மற்றும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் செழிப்பிற்கு உதவுகிறோம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த முன்முயற்சியின் ஊடாக, MSME வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகள் மற்றும் வரையறைகளை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் அவர்களுக்கு சேவையாற்றுவதற்கான HNB ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக, USAID இன் தனியார் துறை அபிவிருத்திச் செயற்திட்டமானது HNB ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றும்.
இது MSME களுக்கு நிதிகளுக்கான அணுகலை எளிதாக்கும் தயாரிப்புகள் மற்றும் செயன்முறைகளை உருவாக்க HNB இற்கு உதவும்.
“இலங்கையின் இன்றியமையாத துறையாகிய நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் துறையில் 30 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் HNB மிகமுக்கிய பங்கு வகித்துள்ளது.
அக்காலத்தில், எமது பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் உள்ள தொழில்முனைவோருடன் நெருக்கமான பங்காண்மையுடன் நாம் பணியாற்றியுள்ளதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான ஆழமான புரிதலையும் பெற்றுக் கொண்டுள்ளோம்.
மிகமுக்கியமாக, நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்காக இத்தொழில்முயற்சிகளின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு இத்தொழில்முயற்சிகளுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொள்வதற்காக, அதிக எண்ணிக்கையிலான நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுடன் நேரடியாகப் பணிபுரிந்த அனுபவத்தை HNB கொண்டுள்ளது.” என HNB இன் தலைமை நிறைவேற்று அலுவலரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜொனதன் அலஸ் கூறினார்.
“தொழில்முனைவோருக்கு கற்பித்தல் மற்றும் தகவல்கள் அடிப்படையில் தேர்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான அறிவு அவர்களுக்கு இருப்பதை உறுதிப்படுத்துதல் ஆகியன அவர்களின் மீள்தன்மை மற்றும் வளர்வதற்கான ஆற்றலை வலுப்படுத்துகிறது.
இத்துறைக்குப் பயனளிக்கக்கூடிய பல நிகழ்ச்சிகளுக்கு உதவிசெய்வதற்கான USAID உடனான எமது தொடர்ச்சியான பங்காண்மை மூலம், எமது MSME வாடிக்கையாளர்களுக்கான சிறந்த நிதி அணுகல் ஊடாக இந்த உழைப்பின் பலன்கள் வெளிப்படுவதைக் கண்டோம்.
எனவே, இந்த வலுவூட்டும் முன்முயற்சியில் USAID உடன் இணைவதில் முதன்மையானவர்களாக இருப்பதில் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், மற்றும் MSMEsகள் தங்கள் வர்த்தகத்தை வலுப்படுத்திக் கொள்ளவும் வளர்த்துக் கொள்ளவும் இப்பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாங்கள் அழைக்கிறோம்.” எனவும் திரு.அலஸ் நிறைவாகக் கூறினார்.
சந்தை மாற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொண்டு மீளக்கூடிய MSMEsகளின் திறனை வலுப்படுத்துவதற்காக, புதிய வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறியவும் நிதியிடலை மேற்கொள்ளவும் USAIDஇன் தனியார் துறை அபிவிருத்திச் செயற்திட்டம் MSMEsகளுக்கு உதவும்.
ஆலோசனை சேவைகள், சங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் வர்த்தகங்களை இணைப்பதன் மூலம், இச்செயற்திட்டம் அவர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்தவும், புதிய உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை அணுகவும் உதவும்.
தற்சார்புடைமைக்கு உதவிசெய்வதற்கும், ஸ்திரத்தன்மையினை வலுப்படுத்துவதற்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்குமான இச்செயற்திட்டம் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பங்காண்மையின் ஒரு கூறாகும்.
இலங்கையில், 1961ஆம் ஆண்டு முதல் மொத்தம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடைய USAIDஇன் நிகழ்ச்சிகள், ஒரு ஆரோக்கியமான, கல்வியறிவுள்ள மற்றும் தொழில்புரியும் மக்கள்கூட்டத்தினை ஊக்குவிக்கிறது. மேலதிக தகவல்களுக்கு usaid.gov/sri-lanka எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடவும்.
Photo caption:
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட (இடமிருந்து வலமாக) கற்றலைஸ் PSD ஸ்ரீலங்கா செயற்பாட்டுத் தலைவர் (இடைக்கால) ஜுவான் பொரேரோ, HNBயின் சில்லறை மற்றும் SME வங்கிச் செயற்பாடுகளுக்கான பிரதிப் பொது முகாமையாளர் சஞ்சய் விஜேமான்ன, HNBயின் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனாதன் அலஸ், இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான USAID இன் செயற்பணி இயக்குநர் ரீட் எய்ஸ்லிமன், இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான USAID இன் செயற்திட்ட முகாமைத்துவ நிபுணர் ரெனீரா போல் மற்றும் கற்றலைஸ் PSD ஸ்ரீலங்கா நிதியிடல் இயக்குநர் ஜூட் பெர்னாண்டோ.