தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டி சில்வா அவர்களின் தலைமையில் தொழில் அமைச்சில் கூடியது. சபைக் கூட்டத்தில் தொழில் அமைச்சின் அதிகாரிகள் தொழில் ஆணையாளர் முதலாளிமார்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் என முத்தரப்பும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தமான கலந்துரையாடலில் தொழில் அமைச்சர் அவர்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி சம்பள நிர்ணய சபையின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றிற்கு ஆயிரம் ரூபா வேதனம் அதிகரிக்கப்பட்டு இருப்பினும் பெருந்தோட்ட கம்பனிகள் திட்டமிட்ட முறையில் அவர்களின் உழைப்பையும் உரிமைகளையும் சூறையாடுவதாக தெரிவித்தார்.
மேலும் கம்பெனிகள் தொழிற்சங்கங்களை பழி தீர்ப்பதாக நினைத்துக்கொண்டு எமது அப்பாவி தொழிலாளர்களை வஞ்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த தொழில் அமைச்சர் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக அனுபவிக்கப்பட்டு வந்த பெருமளவான சலுகைகள் இன்று தொழிலாளர்களால் அனுபவிக்க முடியவில்லை எனவே முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தையின் மூலமாகவே இதற்கு தீர்வு காண வேண்டும் மேலும் முதலாளிமார் சம்மேளனத்தினால் சம்பள நிர்ணய சபையினால் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளையில் தீர்ப்பின் பின்னரே முடிவு எட்டப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட பாரத் அருள்சாமி நாம் முதலாளிமார் சம்மேளனத்தின் கம்பெனிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தோம் அவர்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாதது தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பறிக்கும் கொழுந்தின் அளவை அதிகரித்தல் நாள் சம்பளத்துக்கு பதிலாக பறிக்கும் கொழுந்தின் அளவிற்கு வேதனம் வழங்குதல் அவர்கள் மரபுரீதியாக அனுபவித்து வந்த அனைத்து சலுகைகளையும் தோட்ட நிர்வாகங்கள் கம்பெனிகளின் பணிப்புரைக்கமைய மாற்றி அமைத்துள்ளனர் தொழில் பிணக்குகளை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை காணாது போலீஸ் நிலையங்களை நாடுகின்றனர் போனஸ் மற்றும் முற்பணம் போன்ற அனைத்து தொழிலாளர் நலன்களிலும் கம்பெனிகள் திட்டமிட்டபடி கை வைத்துள்ளனர்.
எனவே இவ் உயரிய சபையின் நோக்கம் முத்தரப்பு ஒத்துழைப்புகளையும் ஆலோசனைகளையும் பெற்று நாட்டில் ஒரு சிறந்த தொழில்துறை உருவாக்குவதே மாறாக பக்கச்சார்பான இவ்விடயங்களை பாதுகாப்பது அல்ல மேலும் தொழில் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் துரிதகதியில் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் தொழிற் சங்கங்களையும் தொழிலாளர்களையும் முதலாளிமார் மற்றும் கம்பெனிகள் தொடர்ந்தும் சிண்டுமேயானால் அமைதியின்மை ஏற்பட்டு தொழில் துறைக்கும் நாட்டின் உற்பத்திக்கும் பாரிய பின்னடைவு ஏற்படும் என எச்சரித்தார்
இதன்போது முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. இதனிடையே குறுக்கிட்ட தொழில் அமைச்சர் பேச்சுவார்த்தைகளின் மூலம் இப்பிரச்சினைக்கான தீர்வுகளை பெற முயற்சிப்போம் தவறும் பட்சத்தில் சட்டவாக்கங்கள் உருவாக்கி அதன்மூலம் தீர்வுகளை பெறுவோம் என்றார்.
மேலும் கொரோனா நோய் தொற்றிலிருந்து எல்லாத் துறை சார் தொழிலாளர்களுக்கும் விசேடமாக தொழிற்சாலைகள் ஆடைத் தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக பணிகளை மேற்கொள்ளல் மேலும் தனியார் துறைக்கான ஓய்வூதியத்திற்கு முன்னெடுப்புகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.