” நான் 2000 வாக்குகள் கூட பெறமாட்டேன் என்று கூறியவர்களுக்கு எனது வாக்காளர்கள் பதில் கூறி விட்டார்கள். நுவரெலியா மாவட்டத்தில் என் தனித்துவமான அடையாளத்தை நிரூபித்துள்ளேன் என மலையக மக்கள் முன்னணியின் பிரதிச் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
பொது தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
” தந்தை வழியில் என்னை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நான் முன் வைத்த அரசியல் கருத்துக்களுக்கு மக்கள் உரிய அங்கீகாரத்தினை வழங்கியுள்ளார்கள் என்பதனை எனக்கு கிடைத்துள்ள வாக்குகள் நிரூபிக்கின்றன.
எனது தொடர்ச்சியான அரசியல் பயணத்திற்கு இதனை அத்திவாரமாக ஏற்றுக்கொள்கிறேன். எனது சமூக செயற்பாடுகளை தொய்வின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு மக்கள் வழங்கியுள்ள ஆதரவினை உற்சாகமாக்கிக் கொள்வேன்.
எனது அரசியல் பயணத்திற்கு ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியான தடைகளும் எதிர்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. எதிர் காலத்திலும் எனது செயற்பாடுகள் அனைத்துமே தனித்துவமானதும் மக்கள் நலன் சார்ந்ததாகவுமே அமையும்.
என் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப மக்களோடும் அவர்களின் நலன் சார்ந்த செயற்பாடுகளோடும் என்னை இணைத்துக் கொள்வேன்.
பிரதான தேசிய கட்சிகளை பின்தள்ளி என்னை 3ஆம் சக்தியாக அடையாளப்படுத்தி விட்டார்கள். இந்த 17,701 வாக்குகள் ஒவ்வொன்றும் நாளை விருட்சமாக வளரும் விதைகள். என்னுடைய அரசியல் ஒருபோதும் முற்றுப் பெறாது என்பதற்கான சாட்சிகள் என்றார்.