ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீபாவளி வாழ்த்துச் செய்தி…
அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது.
உலகலாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்கதொன்றாக தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது.
இந்துக்களின் ஆன்மீக வழிபாடாகவும் பாரம்பரிய கலாசாரப் பெருவிழாவாகவும் காணப்படும் தீபாவளித் திருநாள் மூலம், வாழ்வின் துன்பங்கள் நீங்கி இன்பங்களை அடைந்துகொள்வதே நோக்கமாகும்.
இந்தத் தீபத்திருநாள், அறத்தின் ஆட்சியையும் ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகும். தாமதித்தாலும் வாய்மையே இறுதியில் வெல்லும் என்பதையும் காரிருள் மறைந்து, இன்பங்கள் பெருகி, நலமும் வளமும் பெருகும் என்பதே இந்துக்களின் நம்பிக்கையாகும்.
சுற்றாடலுடன் ஒன்றுபட்டுள்ள பருவ மாற்றங்களோடு, பண்டைய காலந்தொட்டு மானிடர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஆன்மீகப் பரிமாறல்ளை மிகவும் உற்சாகமாகவும் பக்தியுடனும் கொண்டாடுகின்ற தீபாவளி நன்நாள், சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும், மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துகின்றது.
தீபாவளித் திருநாளில் பிரபஞ்சத்துக்கு பிரவேசமாகும் சுப சக்தியால் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி, சௌபாக்கியம், செல்வம் மற்றும் தெய்வ அருள் கிடைக்கவேண்டும் என்று, இந்தத் தீபத் திருநாளில் பிரார்த்திக்கிறேன்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துச் செய்தி
அறியாமை இருள் அகற்றி
அன்பெனும் ஓளியேற்றி
அனைவரும் ஒன்றிணைவோம்
இத்தீபாவளித்திருநாளில்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீபாவளி வாழ்த்துச் செய்தி
இருளை அகற்றி “ஒளியைப்” பெற்றுக் கொள்வதற்கு பல்லாயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றி பிரார்த்தனை புரிகின்ற உலக வாழ் இந்து பக்தர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த தீபாவளித் திருநாள் நிகழ்வு!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் – தீபாவளித் திருநாள் வாழ்த்துச் செய்தி
இருள் சூழ்ந்துள்ள மக்களை ஒலிக்க கொண்டுவந்து அவர்களது இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருள் நீங்கி ஒளியை பிரகாசிக்கச் செய்த இந்த தீபாவளித் திருநாளை நாம் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம் பெருந்தோட்ட மக்களுக்கு எதிர்பார்க்கப்படும் அனைத்து வரப்பிரசாதங்களும் அவர்களது அபிலாஷைகளும் நிறைவேற்றப்படும் என்று பெரிதான நம்பிக்கை எமக்குண்டு என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமது தீபத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது .
மலையக மக்களின் வாழ்வுக்கும் வாழ்க்கை தர உயர்வுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கும் ஆக்கபூர்வமான திட்டங்களை இ.தொ.கா வகுத்துள்ளது.
தூரநோக்கோடு மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த ஆண்டு இறுதியில் நல்ல பலன்கள் கிட்டிவிடும் என்று நாம் நம்புகின்றோம். கடும் உழைப்பை வழங்கி இந்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அளப்பரிய பங்களிப்பை செய்யும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் இருள் அகற்றப்பட்டுற ஒளியினை தேடிச் செல்லும் மக்களாகவும் அவர்களது வாழ்வு செழிப்பாக மலர வேண்டும்.
இதேவேளை மலையகத்தில் படித்த யுவதிகளுக்கு அவர்கள் விரும்பும் துறைகளில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த வாய்ப்பை ஏற்படுத்துவது இ.தொ.காவின் திட்டங்களில் ஒன்றாகும்.
2021ம் ஆண்டு நிறைவடைவதற்கு முன் மலையக மக்களின் உயர்ச்சியை இலட்சியமாகக் கொண்டு புதிய பல திட்டங்களோடு அனைத்து மாவட்டங்களிலும் இ.தொ.கா தமது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது என்பதை இந்த தீபத்திருநாள் தினத்தில் மிக்க மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கின்றோம். மலையக மக்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
நாளை நமதே!!!
<மனோ கணேசன்>
தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
-செந்தில் தொண்டமான் வாழ்த்து செய்தி –
“தீபத் திருநாளாம்” தீபாவளி திருநாளை உவகையுடனும் உற்சாகத்துடனும் அனைத்து மக்களும் கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” – என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
வாழ்த்து செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
”தீபத்திருநாள் நமக்கு அதிகமான அறிவாற்றலை வழங்கி, வளர்ச்சி மற்றும் மேன்மையை அளிப்பதோடு, அறியாமை எனும் இருள் அகற்றி, ஒற்றுமை, அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்தி, நமது நாட்டை உச்சத்துக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும்.
இது சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வுக்கான மிகுந்த நம்பிக்கையை கொண்டு வருவதோடு மக்களை பிரித்துவைக்கும் எல்லா வேறுபாடுகளையும் களைந்து அவர்கள் மத்தியில் சுபீட்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்தத் தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். இந்த தீபாவளியை கொண்டாடுகிற இந்த தருணத்தில் அதர்மம் ஒழிந்து, ஆதிக்க உணர்வு மறைந்து, ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட்டு எல்லோரும் மகிழ்ந்திடும் ஒரு பண்டிகையாக இப் பண்டிகை அமைய வேண்டும் என்று இன்நன்னாளில் வாழ்த்துகிறேன்” — என்றும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமாரின் தீபாவளி வாழ்த்து!
நாடும் வீடும் நலம்பெற தீப ஒளி எங்கும் பரவட்டும் !
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபட்டு நாடும் வீடும் நலம் பெற தீப ஒளி எங்கும் பரவ வேண்டும் என வாழ்த்துவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து புத்தாடை அணிந்து பட்டாசு கொளுத்தி ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்டு பலகாரம் பச்சடிகளுடன் உற்றார் உறவினர் மற்றும் அயலவர்களுடன் குதூகலமாகக் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகையை அடுத்த ஆண்டிலாவது மனமுவந்து கொண்டாடும் நிலை உருவாக வேண்டும் என்று பிரார்த்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் சிறக்க அரசாங்கம் உரிய முறையில் நிவாரணங்களை வழங்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் வேலை நாட்களுக்கு உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு, நாட்டில் பண்டிகைக் காலத்தில் மீண்டும் ஒரு கொரோனா கொத்தணி பரவாமல் இருக்க பொது மக்கள் மிகவும் பொறுப்புடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தமது பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
– பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஸ்வரனின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் புத்தொளி வீச வேண்டும்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்தும் கூட்டு ஒப்பந்தம் முதலானவை அமுல்படுத்தப்பட்டு வாழ்வில் புத்தொளி வீச வேண்டும் என வாழ்த்துவதாக இ.தொ.கா. நிதிச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ராமேஸ்வரன் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பெற்றுக் கொடுக்கவும் அமரர்கள் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் வழியில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் எமது வேலைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிறைவு பெறாமல் இருந்த வீடமைப்புத் திட்டத்தை பூர்த்தி செய்து பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு முடிவடைந்த பின்னர் இந்திய வீடமைப்புத் திட்டம் உட்பட புதிய வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
எமது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எந்தவொரு திட்டத்துக்கும் நாம் ஆதரவாக ஒரு போதும் செயற்பட மாட்டோம் என்பதில் இ.தொ.கா. என்றும் உறுதியாக இருக்கின்றது. எனவே, மக்களை தமது சுயநலத்துக்காக திசை திருப்ப மேற்கொள்ளும் பொய்யான பிரசாரங்களை நம்பி மக்கள் ஏமாந்து விடக் கூடாது.
எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும், பாதுகாப்பை உறுதிப் படுத்துவதிலும் நாம் என்றும் விழிப்புடன் செயற்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் வாழ்த்துச் செய்தி
”அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இவ் தீபத்திருநாளில் எம் மக்களின் துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இனிவரும் காலங்கள் அமையட்டும் என பிராத்திப்போம்.”
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் ருத்திரதீபன் வாழ்த்துச் செய்தி!
‘கொரோனா’ பிரச்சினையால் வலி சுமந்த வாழ்க்கையையே பலருக்கும் வாழவேண்டியேற்பட்டுள்ளது. இந்நிலைமை நீங்கி, அனைவரது வாழ்விலும் நம்பிக்கை பிறக்க வேண்டும். எம்மை தற்போது சூழ்ந்துள்ள இருள் அகன்று, ஒளி பிறக்க வேண்டும். அதற்காக சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி தீபாவளி பண்டிகையை பொறுப்புடன் கொண்டாடுவோம்.”
இவ்வாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளரும், ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான வேலாயுதம் ருத்திரதீபன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” அகந்தை, ஆணவம் உட்பட தீய எண்ணங்களை நீக்கி, தர்மம், நேர்மை, ஒழுக்கம், பகிர்தல் எனும் தீபத்தை ஏற்றும் விதமாகவே தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. மக்கள் தர்மத்தின் வழியில் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டாட்டத்தின் ஊடாக மேற்படி கோட்பாடுகள் சமூகத்தின் மத்தியில் விதைக்கப்படுகின்றன.
ஆகவே, தர்மம், நேர்மை, ஒழுக்கம் என்பவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை நிலைநாட்டுவதற்கும், பாதுகாப்பதற்கும் நாம் முன்வரவேண்டும். இதற்கு தடையாகவுள்ள நரகாசூரர்களை நாம் ஓரங்கட்ட வேண்டும்.
கொவிட் பிரச்சினையால் இன்று மக்களின் வாழ்வும் இருண்டுள்ளது. இன்பம் என்பது அகன்று, துன்பமே எம்மை சூழ்ந்துள்ளது. எனவே, வைரஸ் என்ற இந்த அரக்கனையும் நாம் ஒழிக்க வேண்டும்.
வைரஸின் தாண்டவம் ஒருபுறம். பொருளாதார நெருக்கடி மறுபுறம். இந்நிலையில் தொடர் விலையேற்றத்தாலும் மக்களின் வாழ்க்கை சுமை அதிகரித்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு உரிய வகையில் கிடைக்கப்பெறவில்லை. உரப்பிரச்சினையால் விவசாயிகளும் பெரிதும் காதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வலிகளுடனேயே பொழுதுகள் விடிகின்றன. விடியலுக்காக மக்கள் ஏங்கித்தவிக்கின்றனர். தீபாவளியாவது ‘வலிகளை’ நீக்கட்டும்.
கொரோனா சவாலும் எம் முன்னால் உள்ளது. எனவே, வீண் பயனங்களை தவிர்த்துக்கொள்வோம். பொறுப்புடனும், பொதுநலன் கருதியும் பண்டிகையை கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். உங்களுக்கு இறைவனின் ஆசி கிட்டட்டும்.” – என்றுள்ளது.