பொதுத்தேர்தலின் பின்னர் சஜித் அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்தால்கூட அவர்களுக்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படாது என்று ரணில் அணி உறுப்பினரான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” கூட்டணியொன்றை உருவாக்குவதற்கே ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியது. ஆனால், சஜித் தரப்பு கட்சியொன்றை உருவாக்கியது. அந்த கட்சியின் நிறம் நீலம். அதனை அவர்கள் வெளிப்படுத்துவதில்லை.
ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். தொகுதி அமைப்பாளர் பதவியில் ஏற்பட்டிருந்த வெற்றிடங்கள்கூட நிரப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படுவோம் என சஜித் அணியினர் கூறிவருகின்றனர். 20 ரூபா கொடுத்து அங்கத்துவம் பெறலாம். ஆனால், அவர்களுக்கு எவ்வித பிரதித் தலைவர், உப தலைவர், தேசிய அமைப்பாளர் என எவ்வித பதவிகளும் வழங்கப்படாது.” – என்றார்.