சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று (நேற்று) முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள குறிப்பிட்டளவு அந்நிய செலவணியை, அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு மட்டும் பயன்படுத்தி அதனை உரியவகையில் முகாமை செய்வதற்காகவே எமக்கு இந்த முடிவை எடுக்க நேரிட்டது.
எமது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 51 வருடங்கள் பழமையானது. இங்கு மின் உற்பத்திக்கு தேவையான 37 வீத எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகின்றது. விமான நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் 19 வீதம் உற்பத்தி செய்யப்படுகின்றது. பெற்றோல் மற்றும் டீசல் 43 வீதமே உற்பத்தி செய்யப்படுகின்றது.
நாட்டில் தற்போது கடும் மழை பெய்வதால், 50 வீத மின்சார உற்பத்தி நீர்மூலம் செய்யப்படுகின்றது. எனவே, மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எண்ணெய் தமக்கு தற்போது அவசியமில்லை என மின்சக்தி அமைச்சு எமக்கு தெரியப்படுத்தியுள்ளது. விமானங்களை எடுத்துக்கொண்டால் குறுகிய பயணங்களின்போது பயணத்தை ஆரம்பிக்கும் இடத்தில் எரிபொருளை பெறலாம். நீண்ட தூர பயணத்துக்கு மட்டுமே இலங்கையால் எரிபொருளை வழங்க வேண்டியுள்ளது.
எனவே, இக்காலப்பகுதியில் அதிக கேள்வி அற்ற மசகு எண்ணெய் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி, அதற்காக செலவிடும் அந்நிய செலவணியை பெற்றோல், டீசல், எரிவாயு, மருந்து வகைகள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய பயன்படுத்த முடியும்.
மொத்த பெற்றோல் தேவைப்பாட்டில் 14 வீதமும், மொத்த டீசல் தேவைப்பாட்டில் 29 வீதமுமே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்படுகின்றது. அந்நிய செலாவணி பிரச்சினையை தீர்ந்த பின்னர் சமகு எண்ணெய் இறக்குமதி மீண்டும் ஆரம்பமாகும். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதால் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.” – என்றார்.