ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அமைந்துள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் நான்கு ராஜபக்சக்கள் இடம்பெற்றுள்ளனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகிக்கும் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்படுவார்.
பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ச நிதி, புத்தசாசனம், கலாசார விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ச நீர்பாசனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் நாமல் ராஜபக்ச முதன்முறை அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ராஜபக்சக்களின் மருகனான மாத்தறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்ற நிபுண ரனவக்க மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக பதவியேற்றுள்ளார்.