ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் சங்கமிக்க வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன. இதற்கான தூதுவராக திஸ்ஸ அத்தநாயக்க செயற்பட்டுவருகின்றார்.
ஜனாதிபதி தேர்தலின்போது பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஓரணியில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சி பொதுத்தேர்தலின்போது இரண்டாக பிரிந்தது.சஜித் பிரேமதாச தலைமையிலான அணி வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியாக களமிறங்கியது. ஐ.தே.கவுடன் கூட்டு வைத்திருந்த தோழமைக்கட்சிகளும் சஜித்துக்கு நேசக்கரம் நீட்டின.
இதனால் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டது. எனினும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசியப்பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்களாக 54 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து தலைமைப்பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்ததுடன், கட்சியை மறுசீரமைக்குமாறும் கோரியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சஜித் மற்றும் ரணில் அணிகளை இணைக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன. கரு ஜயசூரிய, திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் இதன் பின்னணியில் செயற்பட்டுவருகின்றனர்.
எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து பேச்சு நடத்த இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவி வழங்கப்படுமானால் ஏற்பதற்கு தயார் என தேர்தலுக்கு முன்னரே சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், வஜிர, ரவி கருணாநாயக்க போன்றவர்கள் தனிவழியில் செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதால் புதிய முயற்சி கைக்கூடுமா என்பதும் கேள்விக்குறியே.
அதேவேளை, கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை ஏற்கும்பட்சத்தில் இணைவு சாத்தியம் எனவும் கொழும்பு வட்டாரங்களில் பேசப்படுகின்றது.